செய்திகள்

எக்னெலிகொட விவகாரத்தில் கோதாவை சிக்கவைப்பதற்காக கடும் முயற்சி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தொடர்புண்டு எனக் கூறுமாறு படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக, படைவீரர்களைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுனில் ரட்நாயக்க என்ற படைவீரர் இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;
கோத்தாபாய ராஜபக்ஷ இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என சுனில் ரட்நாயக்க கூறியிருந்தார்.
கடந்த 21 ஆம் திகதி சுனில் ரட்நாயக்கவின் பிறந்த நாளாகும். நான் உள்ளிட்ட 3 பௌத்த பிக்குகள் சென்று சுனில் ரட்நாயக்கவைப் பார்வையிட்டோம். மூன்று  பிக்குகளுக்கு மட்டுமே சுனில் ரட்நாயக்கவைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
நாம் சிறைக்குச் சென்று பிரித் சொல்லி அவரது மனதை வலிமையாக்கினோம்.
கோத்தாபய இதனைச் செய்யச் சொன்னார் எனக் கூறுமாறு அழுத்தம் கொடுக்கின்றார்கள் எனவும், அவ்வாறு சொல்லாத விடயத்தை நாம் எவ்வாறு கூறுவது எனவும் சுனில் ரட்நாயக்க எம்மிடம் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவுப் படையினரைக் கைது செய்து தடுத்துவைத்துள்ள நீதவான்கூட எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கோ, கடத்தப்பட்டமைக்கோ சாட்சியங்கள் கிடையாது எனக் கூறுகின்றார். அவ்வாறான நிலையில் படைவீரர்களை சிறையில் தடுத்துவைத்திருக்க முடியாது.
சானி அபேசேகர என்ற பொலிஸ்காரர், பிரதமர் ரணிலின் உத்தரவுகளை பின்பற்றுகின்றார். சானி உள்ளிட்ட சில பொலிஸ்காரர்கள் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர்.
சட்டத்தரணியான திலீப பிரிஸ் என்பவர், சட்டத்தரணி சேவைக்கே அவமானம் ஏற்படும் வகையில் செயற்படுகின்றார். இங்கிலாந்தின் தேவைக்கு ஏற்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க படைவீரர்களைக் கைது செய்கின்றார் எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
n10