செய்திகள்

எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை – வட கொரியா

எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை’ என, வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.ஆனால், மற்றொரு கிழக்காசிய நாடும், சீனாவின் அண்டை நாடுமான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா விஷயத்தில் வட கொரியா, தொடர்ந்து பொய் தகவல்களை கூறி வருவதாகவும், பலியானோர் பற்றிய விபரங்களை மறைப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், பக் மியாங் சு, இது குறித்து கூறியதாவது: கொரோனா வைரஸ், சீனாவில் பரவத் துவங்கியதுமே, நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி விட்டோம். மற்ற நாடுகளுடனான எல்லைகளுக்கு, ‘சீல்’ வைத்து விட்டோம். வெளிநாடுகளில் இருந்து, யாரும் வராதபடி, விமான, கப்பல் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது.அதற்கு சற்று முன்னதாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்தோம். இதன் காரணமாக, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.(15)