செய்திகள்

எண்ணெய் மாசைக் கண்டறிய 20 இலட்சம் மதிப்பில் நவீனகருவி: அமெரிக்காவில் இருந்து வந்தது

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா  20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் கையளித்துள்ளார்.

வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் ஆய்வு முடிவுகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு ஆய்வைத் துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளக்கூடிய கருவியொன்றை வாங்கித் தருமாறு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் சிலவற்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழ்ச்சங்கத்தினரும் அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கைத்தமிழர்கள் சிலரும் இணைந்து நிதிப்பங்களிப்புச் செய்து இந்த ஆய்வுக்கருவியை அனுப்பிவைத்துள்ளன.

இந்த ஆய்வுக்கருவியை வடமாகாண சுகாதார அமைச்சின் யாழ்ப்பாண கேட்போர் கூடத்தில் தூய நீருக்கான விசேட செயலணியின் அமர்வு நடைபெற்றபோது,அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிபுணர்குழுவின் இணைப்பாளரான பொறியியலாளர் எந்திரி சோ. சண்முகானந்தனிடம் கையளித்துள்ளார்.

1 3 4 5