செய்திகள்

எதிப்கட்சித் தலைவர் யார்? சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாளை அறிவிப்பார்

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான தீர்க்கமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாளை அறிவிக்க உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த சிலர் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டமையால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாதென்று தேசிய சுதந்திர முன்னணித்தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 60 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 31 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளனர்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எஞ்சிய 113 உறுப்பினர்களில் சிலர் தேசிய அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த 113 உறுப்பினர்களில் தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 58 உறுப்பினர்கள் கையெழுத் திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறே, தற்போதைய எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென தெரிவித்து 63இற்கும் மேற்பட்டவர்கள் சபாநாயகரிடம் கையெழுத்திட்டு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தியுள்ளதால் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய அடுத்த பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியொன்றுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் சம்பந்தனே அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டுமென சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணியும் இதற்கு ஆதரவாக செயற்படும் என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுநலவாய நாடுகளில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறி நிலை இதற்கு முன்னர் இவ்விதம் இடம் பெறவில்லை என்பதுடன் சபாநாயகரின் தீர்ப்பு 54 நாடுகளில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.