செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டுமுன்னணி இன்று உதயமாகின்றது: சோபத தேரர் ஏற்பாடு

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள பிரதான கட்சித் தலைவர்களிடையேயான சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது. தேசிய நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்களுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துகொள்வார்.

கொழும்பு முத்தையா பூங்காவில் கூட்டத்தில், ஐதேக, ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும், மாதுளுவாவே சோபித தேரரும்,இந்த உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல், 17வது திருத்தச்சட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தல், சுதந்திரமான ஆணைக்குழுக்களை அமைத்தல், தேர்தல் முறையில் மாற்றம் செய்தல், ஊழலை ஒழித்தல், மற்றும் பொருளாதார எழுச்சி ஆகிய ஆறு அம்சங்களை அடிப்படையாக கொண்ட புரிந்துணர்வு உடன்பாடே நாளைய கூட்டத்தில் கையெழுத்திடப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி  உருவாக்கப்பட்ட பின்னர், அதன் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ஐதேகவின் தலைமைத்துவச் சபை தலைவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக செயற்குழுவின் அனுமதி பெறப்பட்ட பின்னரே கரு ஜெயசூரிய பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

அதேவேளை,  எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியின் ஆறு அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே அவரை ஆதரிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

முன்னதாக, சந்திரிகா குமாரதுங்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டிருந்தார். ஆனால், சந்திரிகா அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார். எனினும், மாவட்டம் தோறும் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக உரையாற்றுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாதுளுவாவே சோபித தேரர் தான் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கே பாடுபடுவதாகவும், பதவியைப் பெற விரும்பவில்லை என்றும் தெரிவித்து விட்டார்.

இதனால், கரு ஜெயசூரிய பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி 2 ஆம் திகதி நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.