எதிர்க்கட்சித் தலைவராகக் கூட தமிழர் வரமுடியாதா? இராதாகிருஷ்ணன் கேள்வி
நாங்கள் பிரதம மந்திரியாக ஒரு காலமும் வரமுடியாது; ஜனாதிபதியாக வரமுடியாது; ஏன் எதிர்க்கட்சித் தலைவராக வரகூடாது. அந்த அளவுக்கு தகுதி இல்லாதவர்களா? என கேள்வியெழுப்பியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவராகும் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் எமது ஆதரவு நிச்சயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
வவுனியா – பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் பங்குதாரர்களாக உள்ளன. ஆனால் சிறுபான்மை கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தேசிய அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளாத நிலையில் அவர்களுக்கு ஏன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவேண்டும் என்று பேரினவாதிகள் பரவலாகக் கூறுகின்றார்கள்.
இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நாங்கள் ஒரு காலமும் வரமுடியாது; ஜனாதிபதியாக வரமுடியாது; ஏன் எதிர்க்கட்சித் தலைவராக வரக்கூடாது. அந்த அளவுக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்களா? அல்லது இயலாதவர்களா என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஆனால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வரும் சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக உங்களோடு நாங்கள் இருப்போம். அதற்கு எந்தவிதமான பின்வாங்கலையும் நாம் செய்யமாட்டோம்.
சிறுபான்மை மக்களுக்கு இன்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கொல்லாம் தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். இது வரவேற்கப்படவேண்டிய விடயம்.
வட பகுதியில் நிலவிய பல்வேறு அதிகாரப் பிரச்சினைகள் இன்று போக்கப்பட்டுள்ளன. கடிவாளம் அகற்றப்பட்டுள்ளது. சுதந்திரமாக வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆகவே நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சிறுக சிறுக பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு கல்வி முக்கிய விடயமாகும் என்றார்.