செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு அனுமதிக்க முடியாது என ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகள் தெரிவித்தன.

இதுதொடர்பில் ஜேவிபியின் தலைவர்  அநுரகுமார திசாநாயக்க கூறுகையில்:-

நிலையியற் கட்டளையில் எதிர்கட்சித் தலைவர் குறித்து குறிப்பிடப்படாத போதும் கடந்த கால பாராளுமன்ற சம்பிரதாயங்களின் படி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அமிர்தலிங்கம், அநுர பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, காமினி திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, ரத்னசிரி விக்கிரமநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக பணியாற்றியுள்ளனர். எதிர்க் கட்சிக்கு அதிக நம்பிக்கையுள்ளவர் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப் படுவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் பலர் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர். அரசில் இணைந்துள்ள சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க முடியாது தமக்குள் பேசி ஒரு குழு அரசுடனும் மற்றொரு குழு எதிர்த்தரப்புடனும் அமர்வது எப்படி ஜனநாயகமாகும்.

விளையாட்டு வீடு போன்று ‘செட்அப்’ செய்து பாராளுமன்றம் ஜனநாயகம் தொடர்பான நம்பிக்கை வீழ்ச்சி அடையும் இந்த சம்பிரதாயத்துக்கு இடமளிக்க முடியாது என்றார்.