செய்திகள்

எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: வில்பத்துவில் றிஷாட் அறிவிப்பு

வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல காணியிலாவது மக்கள் குடியேற்றப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்குமாறு என் மீது குற்றச்சாட்டு சுமத்தும் சக்திகளுக்கு சவால் விடுக்கிறேன் என்று சூளுரைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களை குடியேற்றும் விடயத்தில் எனக்கும் என்னுடைய சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நான் என்றும் தயாராக இருப்பதுடன், சொந்தக்காணிகளை விட்டு அகதிகளாக வாழும் எமது மக்களை குடியேற்றாமல் நான் ஓயப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சிலாவத்துறை மரிச்சுக்கட்டி யாஸிம் நகர் பள்ளிவாசல் முன்றிலில் நேவற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் முன்னால் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

வில்பத்து விவகாரத்தில் எந்தவிதமான சட்ட விரோதமான செயல்களிலும் நான் ஈடுபடவில்லை. அதேசமயம் மன்னார் மாவட்டத்திலுள்ள மரிச்சுக்கட்டி, பாலப்புலம், கரடிக்குளம் உள்ளிட்ட மக்களின் சொந்த நிலங்களில் அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல,
அந்தக் காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளியேறிய தமிழ், சிங்கள மக்களும் அவரவர் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டே நான் செயற்பட்டு வருகின்றேன்.

வில்பத்து தொடர்பாக என்மீது அண்மைக்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நான் ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்திலேனும் சட்டவிரோதமாக மக்களை குடியேற்றவில்லை. என்மீது இன்று சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டை என்னுடைய அரசியல் வாழ்வுக்கு மாத்திரமல்ல, எனது சமுதாயத்துக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே நான் பார்க்கின்றேன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நான் என்னுடைய மக்கள் பணிகளில் இருந்து பின்னிற்கப் போவதில்லை. எனது மக்களை அவர்களுடைய சொந்த நிலத்தில் குடியேற்றும் வரை நான் ஓயப் போவதில்லை.

எனவே, ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் இணைந்து 25 வருடகாலமாக தங்களது சொந்த நிலங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மக்களும் அவரவர் சொந்த நிலங்களுக்கு திரும்பி அமைதியான வாழ்வை வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க முன்வரவேண்டும். அதேபோன்று தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் இங்கு வந்து குடியேறுவதற்கான வசதிகளை செய்து கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

எனவே, எமது மக்களுடைய வாழ்வில் சுமுகமான நிலைமைகள் ஏற்படுவதற்கான வழிகளைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில் பொதுபல சேனா மற்றும் ராவண பலய போன்ற இனவாதச் சக்திகளின் செயற்பாடுகளுக்கு துணைபோய் எமது மக்களுக்கு துரோகம் விளைவிக்க வேண்டாம் என நான் தயவாக கேட்டுக் கொள்கின்றேன்.

ராவண பலய அமைப்பு நேற்று முன்தினம் வில்பத்து வனப்பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்த நிலையிலேயே, இனவாதச் சக்திகளுக்கு எதிராகவும் அவர்களுடைய பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் அப்பகுதி மக்கள் பெரும் திரளாக அணிதிரண்டு இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பிலிருந்து அனைத்து ஊடகங்களும் அழைத்து வரப்பட்டு விடயம் தொடர்பாக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அழைத்துச் செல்லப்பட்ட ஊகடவியலாளர்கள் அனைவரும் வில்பத்து வனப்பகுதியின் நுழைவாயில் வரை அமைச்சரால் அழைத்துச் செல்லப்பட்டு உண்மை நிலைவரங்கள் தெளிவாக காண்பிக்கப்பட்டன.