செய்திகள்

எந்தப் பதவியையும் நான் கேட்டுப்பெறப்போவதில்லை: மஹிந்த அறிவிப்பு

“நான் எந்தப் பதவியும் கேட்டுப் போகப் போவதில்லை” என முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வருகை தந்திருந்த அவரிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் வேட்பாளர் குறித்து பேசப்பட்டதாக கூறிய அவர், பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதென்றோ தோல்வியடைந் ததென்றோ இப்பொழுது கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட அவர், “ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 5 அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் இரு தரப்பிற்கும் விடுத்த கோரிக்கையை யடுத்தே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு தரப்பும் தொடர்ந்து பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை ஒரு வருட காலம் வரை நீடிக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்குமாறே கோருகிறோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைப்பதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கொழும்பில் ஒன்றுகூட உள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.