செய்திகள்

எந்தமிழா! என்தோழா !உன் சொந்தம் இவர்களெல்லாம் …….!

 

வெள்ளி முளைத்து விடிந்தது வானம்
குருதியில் நனைந்து சிவந்தது மேகம்
அழுதழுது விழி சிவக்க அந்த ஆதவனைதேடி
அழததா முள்ளிவாய்க்காலில் ஆகாயம் ?

குயில்கள் கூவவில்லை குருவிகள் பாடவில்லை
முல்லை மண்ணில் அன்று நடந்ததுதான் …..என்ன ?
முடிக்கப்பட்ட  உண்மைகளை  உலகிடம்  மூடிமறைக்க
அனுப்பப்பட்டவை பட்சிகளல்ல சிலபச்சோந்திகள் மட்டுமே!

கொள்ளி வைக்க இருந்த பிள்ளை
கொத்துக் குண்டடிபட்டு; விழுந்த
பிணக் குவியலுக்குள் ஊனம் வடியும்
சதைகளுக்குள் சதைகளாக …..

அள்ளி முடிந்திருக்கும் தன்கூந்தல் அவிழ
துள்ளித் திரிந்தோடிய அவளின் மழழையின்
உயிரில்லா உடலை கட்டியணைத்து முத்தமிட்டு
கதறிக் கதறி … அழுதாளாம் ஓர் அபலைத்தாய் !

பள்ளி செல்லும் பச்சிளம் பிஞ்சுகளை
குற்றுயிரும் குலையுயிருமாய் ….
கொன்று போட்டார்கள் ஆங்கங்கே
கொடியவர்கள் இரக்கமின்றி

புள்ளி வைத்துக் கோலமிடும் எம் பூவையரை
தள்ளி வைத்து தனியிடத்தே சிதைத்தார்களாம்!
தடுக்க வந்த எம்மினத்து ஆடவரின் ….
தலைகள் கொய்து ஏறிந்தார்களாம்!

என்ன செய்தோம்? ஏது செய்தோம்?
பகைவனிடம் இவ்வாறு இன்னல்பட…
சொல்லிச் சொல்லி வாய் வலிக்க நாமழுதோம்
ஈர் மூன்று ஆண்டுகளய்! -இருந்தும் ஆனதென்ன ?

ஏதுமில்லை அழுதவிழிகள் இன்னும் காயவில்லை
வேதனையை நெஞ்சுகுள்ளே  புதைத்தவர்கள் எத்தனைபேர் ?
சொந்தங்களை தொலைத்தவர்கள் சோகக்கதைகள் சுமந்தவர்கள்
அங்கங்களை இழந்தவர்கள் அனாதைகளாய் ஆனவர்கள்

கைம்பெண்ணாய் கனபேர்கள் காணமல் போனவர்கள்
கடும் சிறையில் மீண்டு புனர்வாழ்வு பெறுவோர்கள்
பித்துப்பிடித்துப் பேதலித்தோர்  சித்தசுவாதினமற்றவர்கள்
இன்னும் எத்தனையோ சித்திரவதைப்பட்டவர்கள்

இன்றும் இருக்கின்றார் இனவழிப்பின் சாட்சிகளாய்
எந்தமிழா! என்தோழா !உன்சொந்தம் இவர்களெல்லாம்…….!
ஒன்றுபட்டுக் கைகோர்ப்பாய் ஓருதாயின் பிள்ளைகளாய் !
நின்று வரினும் நீதிவரும் நேரம்வரின்!

-பிறேமலதா பஞ்சாட்சரம்