செய்திகள்

எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: சரத் பொன்சேகா சொல்கிறார்

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது இராணுவத் தளபதி என்ற முறையில் தனது வகிபாகம் தொடர்பாக எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள தான் ஆயத்தமாக இருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை தென்னிந்தியாவில் பாகிஸ்தானின் உளவு முகவரமைப்பான ஐ.எஸ்.ஐ. தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை மண்ணை பயன்படுத்த புதிய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகைக்கு சரத் பொன்சேகா விரிவான பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அப்பேட்டியில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்பதாவது:
கேள்வி : நீங்கள் மனித உரிமைகள் பற்றிக் கதைக்கின்றீர்கள். ஆனால், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்மட்ட விசாரணையை ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புகள் பல விரும்பியிருந்தன. அந்த விசாரணைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா?

பதில் : எந்தவொரு விசாரணை தொடர்பாகவும் எந்தவொரு நாட்டுடனும் நாங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மனித உரிமை மீறல்கள் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பாக ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால், சர்வதேச சமூகம் விசாரணை தொடர்பாக ஆர்வம் கொண்டிருக்கும். எம்மால் சகலரையும் உள்ளீர்த்துக் கொள்ள முடியாது. சகலருக்கும் இடமளிக்க முடியாது.

ஆனால் எமது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தக்கூடும். எமது இராணுவத்தினால் பொது மக்கள் எப்போதாவது கொல்லப்பட்டிருந்தால் அது தொடர்பாக இராணுவம் விசாரணை நடத்தியிருக்கும். அரசாங்கத்தினால் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி : யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தார்களே? ஐ.நா. போன்ற அமைப்புகள் விசாரணைக்கு வலியுறுத்தியிருந்தனவே. மீறல்கள் எவையும் இடம்பெற்றிருக்காவிடில் விசாரணைக்கு முகம் கொடுக்க நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?

பதில் : சட்டபூர்வமான விசாரணை இருந்தால் உறுப்பு நாடு என்ற முறையில் நாங்கள் அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இராணுவத்தைப் பொறுத்தவரை நான் அதற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. நியாயபூர்வமாக விசாரணை அங்கு இருந்தால் அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். நானே கள நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

போர்க்கதாநாயகர்கள் விசாரணைக்கு முகம் கொடுக்க நான் இடமளிக்க மாட்டேன் என்று கூறுவதன் மூலம் ராஜபக்ஷ அரசியல் ரீதியில் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த மாதிரியான உணர்வுபூர்வமற்ற பல்வேறு அறிக்கைகளை அவர் விடுத்திருந்தார். ஆனால் யுத்தம் பற்றி அவர் சிறியளவிலேயே அறிந்திருந்தார்.யுத்த களத்தில் என்ன நடந்து என்பது பற்றியும் அவர் சிறியளவிலேயே அறிந்திருந்தார்.

கேள்வி : புலிகளை தான் அழித்திருப்பதாக ராஜபக்ஷ தன்னை உருவகப்படுத்தியுள்ளார். நீண்ட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவரெனவும் அவர் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளாரே?
பதில் : ஜனாதிபதி என்ற முறையில் அவர் உத்தரவுகளை மட்டுமே வழங்கினார். அதனை முன்னைய ஜனாதிபதிகளும் வழங்கியிருந்தார்கள். ஆனால் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்திருக்கவில்லை. தந்திரோபாய மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்குத் தெரியாது. சகல ஜனாதிபதிகளுமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியிருந்தனர்.

ஆனால் 2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரபாகரனுடன் சமாதானப் பேச்சுகளை நடத்தவுள்ளதாக ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். புலிகளை இராணுவம் விரட்டிக் கொண்டிருந்த போது 2007 இல் களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆயுதங்களுக்காக அவர் பணத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. நான் மேலதிகமாக 85,000 இராணுவத்தினரை திரட்டியிருந்தேன். நான் தளபதியாக வந்தபோது மாதாந்தம் 4000 பேரை சேர்த்துக் கொண்டேன். முன்னர் வருடாந்தம் சுமார் 3000 பேரே இராணுவத்தில் இணைந்தனர். முழு நடவடிக்கை தொடர்பாகவும் நான் திட்டமிட்டேன். இராணுவத்திலுள்ள சகல மட்டத்தினருக்கும் நான் விடயங்களை தெரிவித்திருந்தேன்.

கேள்வி : பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவிலுள்ள தலைவர்களின் ஒரு பிரிவினர் இப்போதும் கூறுகிறார்களே உண்மை எது?

பதில் : சகலருமே இறந்த உடலை பார்த்தனர். பிரபாகரனினதும் அவரின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனியினதும் உடல்களை நாங்கள் பார்த்தோம். அவரின் மனைவி மதிவதனி மற்றும் மகளின் உடல்களை நாங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் யுத்தத்தின் போது முன்னணியில் இருந்ததாக பேட்டியொன்றில் குமரன் பத்மநாதன் கூறியிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் யுத்த களத்தில் இருந்தார்கள் என்பதை நாங்கள் நம்பினோம். பிரபாகரனின் மனைவி போராளிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்தார். அவரின் மகள் பெண்புலி உறுப்பினராவார். யுத்த களத்திலிருந்து எவருமே தப்பியிருக்கவில்லை.