செய்திகள்

எனது கணவரை கடத்திய 50- 7062 இலக்க வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன்! மனைவி ஆணைக்குழு முன் அழுகை

எனது கணவரை கடத்திய 50- 7062 இலக்க வாகனத்தை கொவல பொலிஸ் நிலையத்தில் கண்டேன் என கணேசு சதாசிவத்தின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,

நானும் எனது கணவர் மற்றும் பிள்ளைகள் கொழும்பு, களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தோம். கடந்த 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி இரவு 9 தொடக்கம் 10 மணிக்கிடையில் எமது வீட்டின் கதவை தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது எனது தம்பி கதவைத் திறந்தார். வீட்டிற்குள் நுழைந்த 5, 6 பேர் எனது கணவரை கூப்பிட்டார்கள். நான் நீங்கள் யார் என கேட்டோம். தாம் பொலிஸ் என கூறி எனது கணவரின் அடையாள அட்டை, பொலிஸ் வதிவிடச் சான்றிதழ் என்பவற்றை பார்த்துவிட்டு எனது கணவரை பிடித்து இழுத்துச் சென்றார்கள்.

நாங்கள் விடும்படி கதறினோம். எம்மை வீட்டுக்குள் விட்டு பூட்டிவிட்டு கணவனை இழுத்துச் சென்றார்கள். அதன்பின் எனது கணவனை 50- 7062 இலக்க வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதைக் கண்டோம். நாம் வெள்ளவத்தையில் இருந்த எனது அப்பாவை வரவழைத்து கதவைத்திறந்து பொலிஸ் நிலையம் சென்று விசாரித்தோம். அவர்கள் கணவரை பிடிக்கவில்லை எனப் கூறினார்கள். அதன் பின் எனது கணவரை கொண்டு சென்ற வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் கண்டேன். அதைச் சென்று பார்த்த போது அதற்குள் வேறுபலர் இருந்தார்கள். அதற்குள் கணவனை காணவில்லை. எப்படியாவது எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள். அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.

N5