செய்திகள்

என்னைப்படுகொலை செய்வதற்குச் சதி, கொலைகாரர்கள் பின்தொடர்கின்றார்கள்: மைத்திரி

தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் கொல்லப்பட்டாலும் மகிந்த ராஜபக்ஷவால் ஜெயிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டினார். நான் போகுமிடமெல்லாம் கொலைகாரர்கள் பின் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை பெல்மதுளைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன மக்கள் முன் உரையாற்றத் தயாரானபோது மேடை மீது சரமாரியான கல்வீச்சு இடம்பெற்றதால் மைத்திரி மயிரிழையில் உயிர் தப்பியதோடு கூட்டத்தில் கலந்து கொண்டோரில் 20இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கேவலமான சம்பவத்தை நேற்றுக் கடுமையாக சாடிய மைத்திரிபால சிறிசேன, இது ஒரு கோழைத்தனமான செயலெனவும் கண்டித்தார்.

இந்தக் கொலை அச்சுறுத்தல்களைக் கண்டு தான் ஒருபோதும் பயந்து ஒதுங்கப் போவதில்லை எனவும் மக்கள் பலம் தன் பக்கமிருப்பதால் எந்தச் சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயாராகவே இருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பெல்மதுளை தாக்குதல் சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர்களை அவசரமாகச் சந்தித்த மைத்திரிபால சிறிசேன அடுத்தடுத்து தான் பங்கேற்கும் கூட்டங்கள் மீது மகிந்தவின் காடையர் கூட்டம் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தன்னை படுகொலை செய்யும் திட்டமொன்று மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமான தகவல்கள் கிட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன, மத, மொழி, கட்சி பேதமின்றி மக்கள் தன்பக்கம் அணிதிரண்டு வருவதை சகித்துக்கொள்ள முடியாத மகிந்த ராஜபக்ஷ கடும் விசனமடைந்த நிலையில் தான் என்ன செய்கின்றேன் என்பதை அவராலேயே புரிந்துகொள்ள முடியாமல் செயற்பட்டு வருகின்றார்.

தேர்தலுக்கு முன்னர் என்னை படுகொலை செய்யும் முயற்சியொன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொலைகாரர்கள் தான் போகுமிடங்களில் தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது இலக்கு தவறி வருகின்றது.

நான் படுகொலை செய்யப்பட்டாலும் மகிந்த ராஜபக்ஷவால் இத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என்பதை உறுதியாகக்கூறுவேன். முழுநாடும் இன்று மகிந்தவின் ஆட்சியின் மீது வெறுப்படைந்து காணப்படுகின்றது. தமது தீர்ப்பை வழங்குவதற்கு 8ஆம் திகதிவரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எமது பிரசாரக்கூட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருகின்றனர். மேல்மட்ட அழுத்தங்கள் காரணமாகவே இது இடம்பெற்று வருவதை நாம் நன்கறிவோம். சிலரை கண் துடைப்புக்காக கைது செய்துவிட்டு பிணையில் விடுதலை செய்கின்றனர். இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் 9ஆம் திகதிக்குப் பிறகு அவர்கள் மீது கடுமையாக நடந்துகொள்ள நேரிடும் என்பதை எச்சரித்து வைக்கின்றேன்.

ஒன்றை மட்டும் மீண்டும் உறுதியாகச் சொல்கின்றேன். என்னைப் படுகொலை செய்தாலும் இம்முறை மகிந்த ராஜபக்ஷவால் தேர்தலில் ஜெயிக்க முடியாது. மக்கள் உறுதியான முடிவை எடுத்துவிட்டனர். மகிந்த தவறான செயற்பாடுகளில் இறங்குவாரானால் மக்கள் எழுச்சியொன்றை சந்திக்க நேரிடலாம் என்பதையும் எச்சரிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.