செய்திகள்

என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது காக்கா முட்டை: தனுஷ்

இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் காக்கா முட்டை.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படத்திற்கு 3 விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காக்கா முட்டை படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் இயக்குனர் மணிகண்டன், இப்படத்தில் நடித்த சிறுவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலரை தனுஷ், வெற்றிமாறன் வெளியிட மணிகண்டன் மற்றும் சிறுவர்கள் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தனுஷ் பேசும் போது, ‘இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது சிறுவன் நானாகவும், பெரியவன் என் அண்ணனாகவும் எனக்கு இருந்தது. இந்த கதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அதனால் இப்படத்தை தயாரிக்க முன் வந்தேன். இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டை படமும், என்னுடைய தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ படமும் வெளியாவதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’என்றார்.