செய்திகள்

எமக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்கள் என்பதாலேயே உடன்படிக்கையின் பிரகாரம் மு. கா வுடன் கூட்டு: இந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பதை தடுக்கவேண்டும் என்று சூழ்ச்சி செய்தவர்கள், எம்மை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக்கழகத்துக்கு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதங்களுக்குள்  பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தை  பெற முயற்சித்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாணசபையில் எமது நடவடிக்கை புதிய பரிணாமம் பெற்றுள்ளது. இதனை எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக்கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள். தாம் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சு பதவியை தருவதாகவும் தெரிவித்து கபட நாடகம் நிகழ்த்தினார்கள். இதன்போது எமது தலைவர் இரா.சம்பந்தன், தான் இது தொடர்பில் முடிவை  மேற்கொள்ளமுடியாது. எமது மாகாணசபை உறுப்பினர்கள் பதினொரு பேரும்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று தெரிவித்துவிட்டார்.
இதுதான் எமது தலைமையின் பண்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  மாகாணசபை ஆட்சியில் இருந்து துரத்த எத்தணித்தவர்களுடன் நாம் கூட்டுச் சேரும்போது, அது எமக்கு நிலையானதாக இருக்காது என்பதால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் அதிகாரப்பரவலாக்கத்தை கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமூகத்துடன் தான் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு பல தடவைகள் துரேகங்களை செய்திருந்தாலும், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம்.
ஆனால், அவர்களிடம் மண்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை. இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் ஏதோவொரு வகையில் இன்று எமக்கு இந்த மாகாணசபை முறைமை கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இந்த முறையில் வடக்கு, கிழக்கை பிரித்ததன் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பில் நாம் கூட்டிணைய வேண்டி இருக்கின்றது. இதனால் தான் நாம் பலரினால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
எமது வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரிணமித்திருக்கும். வட, கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல் உள்ளக சுயாட்சி முறைமையை  ஏற்று இதற்கு எமது மக்கள் தங்கள் ஆதரவை  வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம். இந்த நாட்டை பிரிக்கக்கூடாது என்ற நோக்கமே எம்மிடமும் இருக்கின்றது. நாம் ஒற்றுமையாக இருந்து எமது மக்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதமாக இருக்கின்றோம்.
ஆனால் இந்த மாகாணத்தில் 36 சதவீதமாக இருக்கின்ற சகோதர முஸ்லிம் இனத்தவர்கள் எம்மை விட, அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றார்கள். இது எவ்வாறு நிகழ்கின்றது என்று எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்திலே தான் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.