செய்திகள்

எமக்கு கிடைக்கே வேண்டியதே கிடைக்கிறதே தவிர புதிதாக ஒன்றும் இல்லை: வடக்கு முதல்வர்

இன்று அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுபவை ஒன்றும் புதியவை அல்ல என்றும் சட்டத்தின்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டியவையும் அவர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டவையுமே ஆகும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பொது நூலகத்தில் நேற்று சனிக்கிழமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று எம்மிடையே மூன்று மத்திய அரசாங்க அமைச்சர்கள் வந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. புதிய அரசாங்கம் வந்த பின் ஒரு வித்தியாசமான அரசியல் கலாசாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது மத்திய அரசாங்கம் வேண்டிய பண உதவிகளையும் அனுசரணைகளையும் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது வட கிழக்கு மாகாண மக்களுக்கு. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் எமக்குத் தரப்படுவன யாவும் எமக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டியவையே ஒளிய புதியன அல்ல என்ற எண்ணம் எங்கள் மக்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. காணி எங்களுடையது. அதை இதுகாறும் ஆக்கிரமித்து வைத்துத் திரும்பத்தர முயற்சிக்கின்றீர்கள். வரவேற்கின்றோம். கூட்டுறவுகள் எம்மால் திறமையாக நடாத்தப்பட்டு வந்தவை. அவை அரசாங்க உள்நுழைவின் காரணத்தால் திறமை இழந்தன.

இதனால் எமது மக்களின் சுதந்திரம் பறிபோனது. எனவே சுதந்திரமாகக் கூட்டுறவுத்துறை வடமாகாணத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆவன செய்ய உதவுவோம் என்றும் மத்திய அரசாங்கம் கூறும் போது எம்மிடம் இருந்து பறிபோனவையே எமக்குத் திரும்பக் கையளிக்கப்படுகின்றன. எனினும் உங்கள் நல்லெண்ணத்தை வரவேற்கின்றோம். கடல் வளங்கள், நீர் வளங்கள் எம்மால் பாவிக்கப்பட்டு வந்தவையே. அதற்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. அவற்றை நீக்க எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். எம்மிடம் இருந்து பறிபோனவைற்றையே நாம் திரும்பப் பெறும் காலம் கனிந்துள்ளது.

எனினும் நாங்கள், 67 வருடமாகத் தீர்க்கப்படாத எமது பிரச்சனை பற்றி சதா கூறிக் கொண்டு இருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். பொருளாதார விருத்தியால் மட்டும் எமது மக்கள் குறை தீர்ந்து விடாது. பலாத்காரமாகப் பறித்ததைத் திரும்பக் கையளித்தால் மட்டும் எமது பிரச்சனைகள் நீங்கி விடா. சட்டப்படி சேர வேண்டிய உரித்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவேண்டும். 67 வருடங்களாக எமக்கு நடந்தது போல் எம்மை மீண்டும் அரசாங்கங்கள் ஏமாற்ற முனையக் கூடாது.

இன்றைய அரசாங்கம் எம்மாலும் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம். அதில் எமக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இராணுவத்தினரிடம் போய் நாங்கள் எந்த ஒரு இராணுவ முகாமையும் அப்புறப்படுத்த மாட்டோம் என்றால் அது ஒரு ஏமாற்று வித்தையாகவே முடியும். அதன் அர்த்தமாக நாங்கள் புரிந்து கொள்வது யாதெனில் “தேர்தல் வருகின்றது; நாங்கள் தமிழருக்கு எதுவும் கொடுக்கவில்லை, கொடுக்கமாட்டோம்” என்று சிங்களச் சகோதர மக்களுக்குக் கூறுவது போல் தெரிகிறது. இதனால் அவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பின் தமிழர்களுக்கு நாம் உரியதைச் செய்வோம் என்று அரசாங்கம் கூறக்கூடும். ஆனால் அவ்வாறு செய்வது சிங்கள மக்களை ஏமாற்றுவதாக முடியும். நீங்கள் எமக்கு நன்மை செய்யப் போய் சிங்கள மக்களை ஏமாற்றுவது முறையல்ல. அதற்குப் பதிலாக தமிழ் மக்கள் இதுவரை காலமும் மிகவும் நோவுற்று நொய்ந்து போயுள்ளார்கள். யுத்தம் அவர்களுக்கு ஆற்றெண்ணாத்துயரத்தை அளித்திருக்கின்றது. அவர்களுக்கு ஐக்கிய இலங்கையினுள் மிக உயர்ந்தளவு அதிகாரப் பகிர்வை புதிய அரசியல் யாப்பின் ஊடாக வழங்கவுள்ளோம். நாம் யாவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் வாழ வழி வகுக்க உள்ளோம் என்று கூறி எமக்கு வாக்களியுங்கள் என்று கோருவதே முறையென்று எனக்குப் படுகின்றது. சிங்கள மக்களையும் தமிழ்ப் பேசும் மக்களையும் உங்கள் நம்பிக்கைக்கு இலக்காக்குங்கள். யார் தேர்தலில் என்ன சொன்னாலும் நீங்கள் நீதியின் வழியில், நேர்மையின் வழியில், ஒற்றுமையின் வழியில், மனிதாபிமான முறையில் நடந்து செல்லப்பாருங்கள் என்றே தாழ்மையுடன் வலியுறுத்துகின்றோம். தம்மை நம்பியவர்களைத் தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். அது அவர்களின் நீண்டகாலப் பண்பாட்டின் பிரதிபலிப்பு.

எமது புதிய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் மனதைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஒரு சுமுகமான தீர்வைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதே போல் எமது மனங்களையும் அலசி ஆராய ஆவன செய்ய வேண்டும். எமது மாகாண மக்களின் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்த பலவாறான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதனை மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்தே செயலாற்ற வேண்டும். மேலும் பலவிதங்களில் எம் இருசாராரின் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு பலவித நன்மைகளைக் கொண்டு வரலாம். மதிப்பிற்குரிய நீங்கள் ஒவ்வொருவரும் அதற்காகப் பாடுபடுவீர்கள் என்று நம்புகின்றோம். உங்கள் வரவு நல்வரவாகுக! உங்கள் அனுசரணைகள் எமக்கு நலங்களையும் நல்வாழ்வையும் அள்ளித்தருக என்று வாழ்த்தி என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.