செய்திகள்

எமக்கு வீடு முக்கியமில்லை: வித்தியாவின் மரணத்திற்கு நீதியே வேண்டும்! தாயாரின் கண்ணீர்க் கதை

-கே.வாசு-

30 வருட யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழினம் இன்று வன்புனர்வு மற்றும் போதைவஸ்து என்பவற்றுக்கு எதிராக போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உரிமை பேசிய இனம் இன்று தனது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது. யுத்ததிற்கு பின்னர் வடக்கில் இடம்பெற்ற கலாசார சீரழிவு சம்பவங்களின் உச்சமாக புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. முழு இலங்கை மட்டுமன்றி உலகே இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழர் கலாசாரத்தின் அடையாளமான யாழ் மண்ணில் காமுகர்களின் கரங்கள் பட்டு கறை படிந்த அந்த நாள் கடந்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி வந்தது. அப்படி ஒரு நாள் இனி வரக்கூடாது என்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பு.

IMG_1762புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் கைது நடவடிக்கைகளும், வழக்கு விசாரணைகளும் ஒரு வருடம் ஆகின்ற நிலையில் கூட முடிவின்றி தொடர்கிறது. இது வரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 12 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய ஆதராமாகிய டிஎன்ஏ கூட இன்னும் பொலிசாரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவில்லை. தென்னிலங்கையின் சேயா வழக்கினை விரைவுபடுத்திய பொலிசாரால் இந்த வழக்கை விரைவு படுத்த முடியாது இருக்கின்றது. வழக்கில் கூட கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்கள் அரச சாட்சியாக மாறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரு வருடத்திற்குள் மேல் முடிவின்றி வழக்கை ஊர்காவற்துறை நீதிமன்றால் கொண்டுடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவாக வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை விரைவு பெறும் என்பது பலரதும் நம்பிக்கை.

இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி வித்தியாவின் குடும்பத்திற்கு வவுனியாவில் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் காணி வழங்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் இராணுவத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டினை பெற்ற வித்தியாவின் தாயார் சி.சரஸ்வதி அவர்களுடன் பேசிய போது அவரது கண்ணீர் துளிகளில் படிந்திருந்த வார்த்தைகளே இவை…

IMG_1735வழக்கு விசாரணைக்காக ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு செல்லும் போது சந்தேக நபர்களின் உறவினர்களால் படும் அவமானங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாது என கண்ணீர் விடுகின்றார் வித்தியாவின் தாயார். நீதிமன்றம் முன்பாக அங்கு கடமையில் நிற்கின்ற பொலிசார் பார்த்திருக்கும் போது கூட தகாத வார்த்தைகளால் அவர்கள் கண்டபடி ஏசுகிறார்கள். பேரூந்தில் நான் தனிமையில் செல்ல முடியவில்லை. அதில் கண்டால் கூட அவர்கள் பலர் முன்னிலையில் கண்டபடி பேசுகிறார்கள். குற்றவாளிகளின் உறவினர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள். எந்தத் தவறும் செய்யாது எமது பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நாம் மட்டும் தலை குனித்து வாழ வேண்டியுள்ளது.

புங்குடுதீவில் உள்ள எமது வீட்டில் நடமாடும் ஒவ்வொரு நொடியும் வித்தியாவின் ஞாபங்களே வந்து செல்கின்றது. வித்தியாவின் அப்பாவின் உடல்நிலை கூட இன்று மோசமடைந்துவிட்டது. அவருக்கு வித்தியா தான் உயிர். அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் கம்பஸ், அடுத்தவன் வேலைக்கு போறவன். எங்களுடன் ஒன்றாக இருக்கின்ற எங்கள் எல்லோருடைய கடைச்சிச் செல்லம் தான் வித்தியா. நான் சமைத்த சாப்பாடு சரியில்லை என்றால் கூட அம்மா நீங்கள் இருங்கோ. நான் சமைக்கின்றேன் என தனக்கு பிடித்ததை சமைத்து எனக்கும் தந்து சாப்பிடுவாள். இன்று அவளது சமையலை எங்கு காண்பது. இன்று அவள் இல்லை. அவளது நினைவாக அவள் சமைத்த பாத்திரங்களை கட்டி வைத்துள்ளேன்.

IMG_1855அவளது பாதம் பட்ட நிலத்தில் அவள் நினைவின்றி எம்மால் வாழ முடியவில்லை. அவளது நினைவு ஒருபுறம், சந்தேக நபர்களின் உறவினர்களின் தொல்லை மறுபறம். இதனால் புங்குடுதீவில் இருந்து வெளியேறி வவுனியாவில் இருக்கலாம் என நினைக்கின்றோம். யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது குடும்பத்தை சந்தித்த போது விசேட நீதிமன்றம் ஊடாக எமது மகளின் கொலைக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக சொன்னார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. வவுனியாவில் வீடு தருவதாக சொன்னார். அந்த அடிப்படையில் இந்திய அரசின் மூலம் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுதிட்டம் வழங்கப்பட்டுள்ளது. எமக்கு வீடு முக்கியம் இல்லை. எனது வித்தியாவின் மரணத்திற்கு நீதியே வேண்டும்.

வித்தியா எம்மை விட்டு பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் அவளது மரணத்தால் நாம் பட்ட துன்பத்தை விட பல துன்பங்களை இந்த ஒரு வருடத்தில் சந்தித்துள்ளேன். பலர் கேட்கும் கேள்விகள், ஊடகங்களின் சில பொறுப்பற்ற செயற்பாடுகள் எல்லாம் எம்மை மேலும் வேதனைப்படுத்தியுள்ளது. துன்பத்திற்கு மேல் துன்பத்துடனேயே ஒவ்வொரு நொடியும் கடக்கின்றது. இன்று வழக்கு விசாரணை ஒரு வருடத்தை எட்டுகிறது. வழக்கு மேல் நீதிமன்றம் செல்லவுள்ளது. அதனால் அடிக்கடி வழக்கு வரும். விரைவாக முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். இவை முடிந்த பின்னே வவுனியாவில் வந்து இருக்கலாம் என கருதுகின்றேன். அதன் பின்னாவது சிறிது அமைதி கிடைக்கும் என்பதே எனது நம்பிக்கை.

IMG_1726இவ்வாறான ஒரு குற்றச் செயல் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதன்மூலமே எனது மகளின ஆத்மா சாந்தியடையும் என கண்ணீர்விட்டழுத படி அமர்ந்தார் வித்தியாவின் தாயார். அவருடைய எதிர்பார்ப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பும் கூட அதுவே என்பதே உண்மை.

N5