செய்திகள்

எமது இலக்கை அடைவதற்கு ஒற்றுமையும் அவதானமான செயற்பாடும் முக்கியம்

நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். எங்களுடைய ஒவ்வொரு நகர்வுகளும் எமது இலக்கை அடைவதற்கானதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அந்த இலக்கை எட்டுவதற்கு தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பயணித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள  முடியாத ஒரு தீர்வை நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இன்று மாலை வட மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் வட மாகாணசபையின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் முன்வைத்திருந்தனர். இதன் போது பேசிய சம்பந்தன், நாம் இன்றொரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் சர்வதேசமும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எங்களுடைய ஒற்றுமை மிகமிக முக்கியமானதாகும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மிகவும் அவதானமானதாக இருக்க வேண்டும். எனவே சமகால அரசியலில் இடம்பெற்றுவரும் தமிழர்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் இணைந்து செயற்பட்டு அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

n10