செய்திகள்

எமது சந்ததியை மெல்ல அழித்துவரும் சுன்னாகத்து ஒயில் நீர்

“பயங்கரவாதத்தால் மீட்கப்பட்ட வடக்கு மக்கள் தற்போது அனுபவிக்கும் சமாதானம் மற்றும் வாழ்க்கை நிலைமையினைச் சீர்குலைப்பதற்கு செயற்பாட்டாளர்களினால் வடக்கு பிரதேசத்தில் மற்றும் இந்தப் பிரதேச மக்களுக்கு நிரந்தரமான மின்சார விநியோகத்தை செயலிழக்கச் செய்வதற்கு இதனூடாக உறுதிப்படுத்தி முறையற்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கோவைப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பம் ஆகும்”.

DSC01462“இலங்கைக்குள் இலங்கை குடியரசின் அரசியல் யாப்பு சட்டத்தின் கீழ் செயற்படுகின்ற நீதிமன்றம் என்ற வகையில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புபட்ட சமாதானத்தைச் சீர்குலைக்கின்ற குழுக்களில் அங்கம் வகிக்கும் அல்லது அவர்களை செயற்படுத்தும் நிறைவுப் பொருளாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் இதுபோன்ற வழக்கொன்றில் தற்காலக்கட்டளை மற்றும் நிரந்தரக் கட்டளையுடனான சலுகைகளைக் கேட்டுக் கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.”

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் மல்லாகம் நீதிமன்றில் சமர்ப்பிக்கபட்ட ஒரு சத்தியக்கூற்றின் சிறுபகுதி. சுன்னாகம் மின்நிலையத்தின் கழிவு ஒயில் நீரில் கலந்துள்ளதால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் எதிர்மனுதாரர் அத்தபத்து முதியான் சலாகே தர்மசிறி பண்டார அத்தபத்து (661040491ஏ) பௌத்த மதத்தைச் சார்ந்தவராக உறுதிப்படுத்தி இவ்வாறு சத்தியம் செய்கின்றார்.

இந்த நாட்டில் தமக்குச் சார்பாக நீதி கிடைக்க வேண்டுமென்றால் மனுதரப்பை பயங்கரவாதிகளாகச் சித்தரித்தால் போதும் என்ற நம்பிக்கை சிங்களவர்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இது. இந்தப் பூச்சாண்டியைக் காட்டினால் மறுதரப்பு மௌனமாகத்தானே வேண்டும். இதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. டாக்டர் இராசலிங்கம் சிவசங்கர், வில்வராசா சதீஸ்கரன், சுப்பிரமணியம் கஜேந்திரன், சிவனேஸ்வரன் ஜெயபாலினி, இராமமூர்த்தி ரமேஸ்குமார், மாரிமுத்து செல்வராசா, சுப்பிரமணியம் பாலகிருஷ்ணதாஸ், சின்னத்துரை சிவமைந்தன், சிவசக்திவேல் சிவறதீஸ், கிட்டிணன் யோகநாதன், வேலுப்பிள்ளை சிறிஸ்கந்தராஸா ஆகிய மனுதாரர்கள் 11 பேரும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் என்பது தான் இந்தப் பௌத்தரின் மனதில் ஓடும் தீர்ப்பு. பொதுநலநோக்கோடு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தால் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடும் அநியாயம் இது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு பிரதேச சபை மற்றும் மாகாணசபையின் செயற்பாடுகள் இந்த விடயத்தில் பெரிதும் ஏமாற்றம் அளிக்கின்றன. மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவேண்டிய அக்கட்சி கண்களை மூடி காதுகளை பொத்திக்கொண்டிருக்கிறது. போராட்டம் நடத்தும் மக்களைப் பார்க்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை. இல்லாவிட்டால் ஓயில் பிரச்சினை சம்பந்தமான மகஜரில் கையெழுத்திட்ட பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று ஏன் கையெழுத்திட்டுக் கொடுத்தீர்கள். தண்ணீரில் பிரச்சினை என்றால் எம்மிடமல்லவா வந்திருக்கவேண்டும் என்று இராணுவம் கேட்ட போதாவது அவர்கள் தங்கள் கவனத்தைக் திருப்பியிருக்க வேண்டும். பிரச்சினைக்குரிய பகுதிகளை அனர்த்தப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்றாவது கோரிக்கை விட நடவடிக்கை எடுக்க முடிந்ததா? பச்சை இனவாதியான சம்பிக்க ரணவக்க எமது மக்களில் இரக்கம் கொண்டா மின்வழங்கப் புறப்பட்டார் என்றாவது யோசித்திருக்க வேண்டாமா! இணக்க அரசியல் செய்ய முயல்வோர் தான் இது குறித்து கவலைப்படவில்லை. “நீயுமா புருட்டஸ்” என்று கேட்கும் நிலை எமக்கு. ஓயில் நீரை வழங்கியது தொடர்பாக வலி – வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றம் ஒன்று எச்சரிக்கை விட்டது என்றால் நாம் வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

DSC01471

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்றொரு கவிஞர் குறிப்பிட்டார். அது நடக்கிறதோ இல்லையோ மெல்லத் தமிழர் இனிச் சாவார் என்பது மட்டும் உறுதி எனும் வகையில் காரியங்கள் கனச்சித்தமாக நடைபெறுகின்றன. சுனாமித் தண்ணீர் மேலெழுந்து கீழே குதித்து தமிழர் உயிரைப் போக்கியது. சுன்னாகத்து ஓயில் கலந்த நீர் கீழிருந்து மேல் எடுக்கப்பட்டு எமது சந்ததியையே அழிக்கப்போகின்றது.

வானிலிருந்து கடலிலிருந்து தரையிலிருந்து தமிழர் உயிரைப் பறித்தெடுத்த ஆட்சியாளர்கள் இப்போது மெல்லக் கொல்லும் நஞ்சாக எமது தண்ணீரையே எமக்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர். இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. அப்படி நடந்ததாக நிறுவ முனைவது தமிழினத்தை அழிக்கும் செயலுக்குத் துணை போவதாகவே அமையும்.

முதலில் இந்த விடயத்தில் அசமந்தமாக இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தவறை மூடி மறைக்க முயல்வோர் அனைவரும் தற்காலிகமாக சிறிது காலம் இந்தப் பிரச்சினைக்குரிய பகுதியில் குடியிருந்து பார்த்தால் தான் அவர்களால் இந்த பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும். அந்தளவுக்கு விளைவுகள் மோசமாகி வருகின்றன. உலகத்தின் கவனத்தை இந்த அனர்த்தத்தின் பால் நாம் திருப்ப வேண்டும். இதற்க்கு உலகத்தின் கவனத்தை இந்தப் பிரச்சினையின் பால் திருப்புவதற்கு புலம் பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தில் சிறப்பான பங்காற்றமுடியும். குறிப்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலையீட்டை இங்கு ஏற்படுத்த வேண்டும் .

பகலவன்