செய்திகள்

எமது மக்களின் பிரச்சினைகள் இந்த அரசிலும் தீர்க்கப்படாதா? டக்ளஸ் கேள்வி

தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களைக் கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதா என இலங்கை தொடர்பில் ஆய்வு நடாத்தியுள்ள ஒக்லான்ட் நிறுவக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்பகுதியில் இனவாத சக்திகளின் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கி வருவதை அறியமுடிகிறது. இதனிடையே, மூவின மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் ஏற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அரசு தொடர்ந்து மௌனம் சாதிக்குமா? என்ற கேள்வி எமது மக்களிடையே எழுந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ். புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆய்வாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், காணாமற்போன எமது உறவுகளைக் கண்டறிவது தொடர்பிலும் விஷேட ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகவே கேட்டுள்ளோம். அதற்கு அவர் இணக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்.

அத்துடன், சொந்த நிலங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ள எமது மக்களின் மீள்க் குடியேற்றம் தொடர்பிலும் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும், எமது மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் அரசியல் ரீதியிலான உரிமைகளை நாம் பெறவேண்டியுள்ளது. இதற்காகவும் நாம் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

எமது மக்கள் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நாம் செய்தாக வேண்டும்.

ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதமானது எமது மக்களுக்கு எதையும் உரித்தாக்கிவிடப் போவதில்லை. இன்றைய அரசுடன் தேசிய நிறைவேற்றுச் சபையில் பங்கெடுத்து, அதிகாரங்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காமல், ஏற்கனவே தேர்தல் காலங்களில் கூறி வருவதுபோல், மீண்டும் அடுத்த வருடம் எமது மக்களின் பிரச்சினைகள் தீரும் என இப்போது கூறி வருகின்றனர். இப்போது கூட்டமைப்பு வசமுள்ள அதிகாரத்தை வைத்து எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத இவர்கள், இனி எப்போது தீர்ப்பார்கள் என்ற சந்தேகம் எமது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க வகையிலான பொறிமுறைகளை நாமே வகுத்து, அதனை செயற்படுத்திக் கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான சாதகமான நிலையை நாம் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.