செய்திகள்

எமது மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை வீரர்கள்: செல்வராசா

தென்னாபிரிக்காவில் கருப்பின மக்களின் வீடுதலைக்காகப் போராடிய நெல்சன்மண்டேலா அவர்களை இந்த உலகம் பயங்கரவாதி எனறு சொன்னதில்லை விடுதலை வீரர் எனறே கூறுகின்றது. அது போலவே எமது மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இளைஞர்களும் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை வீரர்கள் என்றே உச்சரிக்கப்பட வேண்டியவர்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றவருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாவட்டத்தில் கல்விநிலைபற்றி நாம் சிந்திக்கின்ற போது எமது மாவட்டம் கல்வியில் சற்று பின்னடைந்திருப்பதை நாம் காணலாம். எமது தமிழ் சமுகம் கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இடம்பெற்ற கோர யுத்தத்தினால் கல்வியைமட்டுமல்லாது எமது வாழ்வாதாரம், சொத்துக்கள், உயிர்கள் அனைத்தையும் இழந்தோம். 2009ம் ஆண்டுகளில் இந்த யுத்தம் ஒரு மௌனத்தை அடைந்தாலும் அதன் பின்னும் எமது இளைஞர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட்டனர்.

எமது இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களை ஒரு நாளும் பயங்கரவாதிகளாக கணிக்க முடியாது. தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நெல்சன் மண்டேலா அவர்கள் அவரது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இறுதியில் பேச்சுவதார்த்தையின் மூலம் அந்தநாட்டில் தமது இனத்தின் அரசியலைமேம்படுத்தி தமக்கென்றொரு அரசாங்கத்தை ஏற்படுத்திய பெருமை நெல்சன்மண்டேலா அவர்களையே சாரும்.

நெல்சன்மண்டேலா அவர்களை உலகத்தில் வாழும் எந்த சமுகத்தவரும் பயங்கரவாதி என்று சொல்லவில்லை. ஒரு விடுதலை வீரர் என்றே இந் தஉலகம் கூறுகின்றது. அது போலவே இலங்கைத் தீவில் தமது இனத்திற்கு உரிமை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படமுடியாது அவர்களும் விடுதலை வீரர்கள் என்றே உச்சரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் 2009களில் இந்தக் கொடூரப் போர் மௌனித்தாலும் அதனைத் தொடர்ந்து உண்மையான பயங்கரவாதம் எம்மை சூழ்ந்தது. அதுவே அரச பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தின் மூலம் கடந்தமாதம் 8ம் திகதி வரை எத்தனை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் எத்தனை எத்தனை பேர் காணாமற் போனார்கள். அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என அறியாமல் எத்தனை பெற்றோர்கள் எத்தனை மனைவியர்கள் அவர்களை பல முகாம்களுக்குச் சென்று தேடித் தேடி அலைவதை நாம் காண்கின்றோம்.

இந்த வகையில் அரச பயங்கரவாதம் ஒன்று இந்தநாட்டில் இருந்தது என்பதை நாம் மறந்து விடமுடியாது. இன்று ஓரளவிற்கு இந்த அரசபயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அதற்கான தீர்வுகள் செயற்படுத்தப்படும் என்ற ஒரு பச்சைக் கொடி புதிய அரசாங்கத்தாலும் புதிய ஜனாதிபதியினாலும் கட்டப்பட்ருக்கின்றது. இது நடக்குமாக நடக்காமல்
விடுமா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

எனவே சென்ற மாதத்தில் இருந்து ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றம் ஓரளவு நாம்nபயங்கரவாதம் இல்லாத ஒருவேட்கையில் நாம் இருந்து கொண்டிருப்பதை நாங்களாகவே உணர்கின்றோம். கடந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்பதில் சிறுபாண்மை இனம் மிகவும் உத்வேகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் என்றும் இல்லாதவாறு மக்கள் மத்தியில் தேர்தல் ஆர்வம் இருந்தது. இலங்கையில் அதிகூடிய தேர்தல் பதிவு மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஏற்பட்டிருந்தது.

சிறுபாண்மை இனம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு கூடுதலாக இருந்ததை நாம் அவதானித்தோம். இந்த நிலையில் இன்று ஒரு பயங்கரவாதம் இல்லாத ஒரு சமாதானத்தை நாம் ஓரளவிற்கு அடைந்திருக்கின்றோம்.

ஆனால் உண்மையான சமாதானம் இந்தநாட்டில் மலரவேண்டுமாயின் தமிழர்களின் அபிலாசைகள் அத்தனையும் தீர்க்கப்படவேண்டும். இவை தீர்க்கப்படவில்லை என்ற காரணத்தினால்தான் இந்த நாடு பற்றி எரிந்தது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பிழைத்தார்களே தவிர அவர்கள் எமது பிரச்சினைகளைதிர்க்க மறுத்துவிட்டார்கள். அவ்வாறு தீர்க்கப்பட்டிருந்தால் 2009ல் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான உயிர்களை நாம் இழந்திருக்கமாட்டோம்.

எனவே அந்த அபிலாசைகள் தீரும் வரை அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கும். தமிழர்கள் அச்சமின்றி ஒரு அதிகாரத்தினைப் பெறும் வரை நாம் ஓயமாட்டோம்.

நாம் தனி நாடு கேட்கவில்லை நாம் கேட்பது எல்லாம் இந்தநாட்டில் வாழுகின்ற தமிழினம் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் எதுவித பயமும் இன்றி தாங்கள் வாழ்வதற்குரிய அதிகாரப் பரவலாக்கலையே நாம் கேட்கின்றோம். அந்த அதிகாரப் பரவலாக்கல் எந்த வழிமுறையில் அமைந்தாலும் அதை நாங்கள் பெறுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

20150212_141812 20150212_142124 20150212_155456 20150212_174342 20150212_174454 20150212_174905 20150212_175113 20150212_175136