செய்திகள்

எமது வாழ்வில் ஒளியேற்ற நல்லாட்சி ஜனாதிபதி முன்வரவேண்டும்: வவுனியா மாவட்ட பயிர்செய்கையாளர்கள் கோரிக்கை

எமது வாழ்வில் ஒளியேற்ற நாம் வாக்களித்த நல்லாட்சி ஜனாதிபதி முன்வர வேண்டும் என வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பயிர்செய்கையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம். அத்திட்டம் வவுனியாவில் எவ்விடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை காணப்படுகின்றது. இருப்பினும் இத்திட்டம் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலன் கருதி கொண்டு வரப்படும் நிலையில் வவுனியா நகரில் உள்ள பலரும் இதனை தாண்டிக்குளத்தில் அமைக்க முனைகின்றனர்.

ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பலரும் பின்தங்கிய கிராமங்களிலேயே வாழ்கின்றனர். தற்போது எமது தேவைகளுக்காக நாம் வவுனியா நகருக்கே வந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால் பட இடர்களை எதிர்நோக்குகின்றோம். ஆனால் இத்திட்டம் கிராம மக்களை மையப்படுத்தி ஓமந்தையில் அமைக்கப்படுமாக இருந்தால் நாம் அதிக பயன்களைப் பெற முடியும்.

எமது உற்பத்திகளை அருகிலேயே விற்பனை செய்து வருமானம் ஈட்டக் கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எமது பகுதிகளும் அபிவிருத்தி அடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. தாண்டிக்குளத்தில் அமைப்பதால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக நாம் இந்த நிலையிலேயே வாழ வேண்டி வரும். எனவே கௌரவ ஜனாதிபதி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் இந்த பொருளாதார நிலையத்தை ஓமந்தையில் அமைத்து ஏழைகள் வாழ்வில் ஓளியேற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் வடமாகாண முதலமைச்சர் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5