செய்திகள்

எம்மை வழிநடத்துவதும் எமக்கு சக்தியைத் தருவதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே: நிமல்சிறிபால டி சில்வா

ஜீலை மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலேயே தமது தேர்தல் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவதாக இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தற்போதைய அரசியல் கள நிலவரங்களின்படி ரணில் சிங்கவிற்குக் கிடையாது. அந்த அதிகாரம் எமது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கே உள்ளது. எமக்கு 127 ஆசனங்கள் உள்ளன. அப்படி இல்லையாயின் எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே தேர்தல் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனம் செய்யும் எந்த ஒரு திகதியிலும் நாம் தேர்தலுக்குச் செல்ல தயாராக உள்ளோம். இந்தத் தேர்தல் போட்டியில் எமக்குச் சக்தியைத் தருவதும் எம்மை வழி நடத்துவதும் வேறு யாருமல்ல. எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே எனக் குறிப்பிட்டுள்ளார்.