செய்திகள்

எம்.பி.க்களுக்கான கொடுப்பனவு அதிகரித்து வழங்கப்படமாட்டாது

எம்.பி.க்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்கும் திட்டத்தை வாபஸ் பெறுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நாடு முழுவதும் பெருகிவரும் அதிருப்தியை அடுத்தே சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாபஸ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்.பி.க்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்குவதற்கான பிரேரணையை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைப்பதென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இந்தப் பிரேரணையை அமைச்சரவையின் அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று முடிவு செய்துள்ளனர்.

இந்த பிரேரணையை நேற்று மாலை நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பொது மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் நிலையில், எம்.பி.க்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுவதற்கு நாடு முழுவதும் உருவான மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்தே இந்த கடைசி நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், மேற்படி பிரேரணை வாபஸ் பெறப்பட வேண்டும் என்று சபாநாயகர் முன்மொழிந்ததாகவும் அதை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் பாராளுமன்ற வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

எனினும், எம்.பி.களுக்கான மாதிவெல வீடமைப்பு தொகுதியில் குடியிருக்காத எம்.பி.க்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவாக தலா 50 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான யோசனையை மேற்கொண்டு தொடர்வதற்கு கட்சித் தலைவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

n10