எம்.பி. பதவியை மீண்டும் பெற்றுத்தரவும்: பொன்சேகாவின் மனு நிராகரிப்பு
பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுத்தருமாறு அவருடைய அந்தரங்க செயலாளர் சேனக ஹரிபிரிய டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை நிராகரித்தது.
பிரதம நீதியசரசர் கே .ஸ்ரீபவன், நீதியரசரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் கொண்ட நீதியரசர் குழுவே இந்த மனுவை நிராகரித்தது.
சரத் பொன்சேகாவின் அந்தரங்க செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு சட்டரீதியான உரிமை மற்றும் திறன் இல்லை என்று சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் செய்யப்பட்ட சரத்பொன்சேகா, பின்னால் இருக்கையில் வேறொரு நபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கொண்டுசெல்வதில் சட்டரீதியான திறன் இல்லை. மனுதாரரினால் கோரப்பட்டுள்ளதன் பிரகாரம் பொன்சேகாவின் வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த கெடகொடவை, அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த நாடாளுமன்ற உறுப்புரிமையை பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சட்டரீதியான மானியங்கள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்கவேண்டும் என்று அவருடைய அந்தரங்க செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதை நிராகரித்த உயர்நீதிமன்றம் அந்த மனுவை கட்டணம் இன்றி தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளான கேப்டன் டி.சில்வா, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
முன்னால் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா நாடாளுமன்ற உருப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அவர், 30 மாதங்கள் சிறையில் இருந்தார். இது அவரது அடிப்படை உரிமை மீறல்களில் ஒன்றாகும் என மனுதாரரினால் முன்வைக்கப்பட்ட வாதமும் நிராகரிக்கப்பட்டது.