செய்திகள்

தீர்க்கதரிசனமிக்க செயற்பாடுகளே இன்றும் நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமாகும்:கஜதீபன்

எம் முன்னோர்களின் தீர்க்கததரிசனமான செயற்பாடுகளே எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத கொடூரங்களையும் தாண்டி இன்று யாருக்குதம் அடி பணியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும்.

இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்.

புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலைய 55 ஆவது ஆண்டு விழாவும்,தமிழ்ப் புத்தாண்டு விழாப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழாவும் கடந்த செவ்வாய்க்கிழமை (14.04.2015)நிலையத் தலைவர் ந.அன்பழகன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழினம் தோன்றிய காலத்தைப் பற்றி ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் ஒவ்வொரு விதமாகக் குறிப்பிட்டு வருகிறார்கள்.எது எவ்வாறு இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றி விட்ட பண்பாட்டுச் செழுமையும்,பராம்பரியமும் மிக்க எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டிப் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து தனது இருப்பைக் கொண்டுள்ளமைக்குக் காரணம் எமது இனத்தின் முன்னோர்களின் தீர்க்கதரிசனமும் தியாகத் தொண்டுகளும் தான்.

அவ்வாறான செயற்பாடுகளுக்குப் பாரிய பங்களிப்பை இவ்வாறான சனசமூக நிலையங்கள் வழங்கி வந்துள்ளன.மக்களை ஒன்று திரட்டிக் காலமாற்றத்துக்கு ஏற்றாற் போல கருத்துக்களை அவர்களது உள்ளங்களில் விதைத்து அவர்களது இன உணர்வுகள் மங்கி விடாமல் எமது இனத்தின் தொடர்ச்சியான இருப்பை முன்னகர்த்தும் பாரிய பணியை ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள சனசமூக நிலையங்கள் செய்து வருகின்றன.

அந்த வகையில் இந்தச் சிவலப்பிட்டிச் சனசமூக நிலையமானது தனது பணியை 55 ஆண்டு காலமாகச் சிறப்பாக ஆற்றி வருகின்றது.இதன் ஆரம்ப காலத் தலைவர்கள் இன்று மேடையில் பாராட்டுப் பத்திரம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரிய கடமையிருக்கின்றது.என்ன நோக்கத்துக்காக இம் மூத்தவர்கள் தங்களை அர்ப்பணித்து இவ்வாறான கருமங்களை அன்றைய காலப் பகுதியில் முன்னெடுத்தார்களோ அவற்றிலிருந்து வழுவாது நாமும் அந்த இலட்சியங்களை அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து முன்னெடுத்துச் சென்றே ஆக வேண்டும்.வெறுமனே மூத்தவர்கள் செய்த சாதனைகளை மாத்திரம் சொல்லிக் காலம் கடத்திக் கொண்டிருக்காமல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களைச் சாதனையாளர்களாக மாற்றுவதற்குக் களம் அமைக்கும் இவ்வாறான அமைப்புக்களில் இணைந்து பங்காற்ற வேண்டும்.இளைஞர்கள் தமக்கும், தமது ஊருக்கும்,ஒட்டுமொத்த எமது இனத்துக்கும் பயனுள்ளவர்களாகப் பணிகளை ஆற்றிட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் புதுவருடப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதி மிக்க பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பதக்கங்கள் அணிவித்தும்,சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

20150414_215722 20150414_235740 20150415_002949 20150415_004150

யாழ்.நகர் நிருபர்-