செய்திகள்

எல்லாமே சிறப்பாக அமைந்ததால் முதல் வெற்றியை பெற்றோம்: ரோகித்சர்மா

2013–ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. தொடக்க வீரர் லெண்டில் சிம்மன்ஸ் 44 பந்தில் 59 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), உன்முக் சந்த் 37 பந்தில் 58 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித்சர்மா 15 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். டேவிட் வைஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 19 ரன்னில் வெற்றி பெற்றது.

டிவில்லியர்ஸ் 11 பந்தில் 41 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் வைஸ் 25 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்பஜன்சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:–

4 ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் எங்களுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங், பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததால் முதல் வெற்றியை பெற்றோம். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முதல் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

எங்களது பேட்டிங் அபாரமாக இருந்ததால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. இதேபோல இறுதி வரை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொருவரும் சிறப்பாக வீசினார்கள். மொத்தத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து வீராட் கோலி கூறும்போது, நாங்கள் பந்துவீச்சில் கூடுதலாக ரன்களை கொடுத்துவிட்டோம். டிவில்லியர்சும், வைசும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு சில தவறுகளால் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்றார்.

மும்பை இந்தியன்ஸ் 6–வது ஆட்டத்தில் டெல்லியை 23–ந்தேதி சந்திக்கிறது. பெங்களூர் அணி 4–வது ஆட்டத்தில் சென்னை அணியை 22–ந்தேதி எதிர்கொள்கிறது.