செய்திகள்

எல்லைப் பகுதி மோதல்: பாக் இராணுவம் சூடு இந்திய படை வீரர் பலி

இந்திய – பாகிஸ்தானிய ஜம்மு-காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார். பாகிஸ்த்தான் படையினர் அத்து மீறி வந்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராகேஷ் ஷர்மா தகவல் தருகையில், “சம்பா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஸ்ரீநாம் கவுரியா என்ற வீரர் பலியானார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலையடுத்து இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

கத்துவா, சம்பா பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை எல்லையில் 550 அத்துமீறல்கள் நடந்துள்ளன என இந்தியத் தரப்பில் கூறப்படுகின்றது.

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளும் ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன் பின்னர் 2014- ஆண்டில்தான் அதிகபட்சமாக 550 அத்துமீறல்கள் நடந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் – அக்டோபர் இடையிலான காலகட்டத்தில் நடந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். 1000 கணக்கானோர் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.