செய்திகள்

எவரையும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க முடியாது என்கிறார் பிரதமர் ரணில்

பள்ளி மாணவி படுகொலை தொடர்பில் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்துச் செயற்பட முற்பட்டதை அனுமதிக்க முடியாதென தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசு நீதியை நிலைநாட்டும். மக்கள் பொறுமையுடன் இயங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டம் சகலருக்கும் பொதுவானது. குற்றவாளிகளை பாதுகாக்கவோ, தப்புவதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது.

புங்குடுதீவு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை குறித்து கவலையடைகின்றோம் .இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் . எதிர்காலத்தில் ஏற்றவிதமான சட்டங்களை இயற்றவேண்டும். எவ்வாறாக இருந்தபோதிலும் பள்ளி மாணவியின் கொலைக்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் உருவாகியிருக்கும் நிலைமைகள் குறித்து ஆராய சட்டத்தரணிகளை உள்ளடக்கிய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பொலிஸார் கடமையை சரிவரச் செய்யவில்லை. தாமதமாகவே செயற்பட்டனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது.

ஏனெனில் சம்பவத்தையடுத்து பொலிஸ் தலைமையகம் நேரடிக் கண்காணிப்பில் பாதுகாப்புச் செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருந்ததை நாமறிவோம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக குடாநாட்டில் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்து செயற்பட முனைந்தனர். இதனை சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. சட்டம், ஒழுங்கைப் பேண பாதுகாப்புத்தரப்பு உரிய நடவடிக்கையை எடுக்கும் நிலை அங்கு ஏற்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.