செய்திகள்

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது : அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவில் இருந்து இங்கு வர 20 தொடக்கம் 30 வீதமானவர்களே வர விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்கள் எங்கு இருக்கப்போகின்றனர், அவர்களுக்கு இடம் என்ன அவர்களின் வசதிகள் என்ன என்று அறிந்துதான் அவர்களை வரவழைப்போம்.

அவர்களை அழைத்து வருவதற்க முன்னர் வவுனியா, கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அவர்கள் இழந்த காணிகளை தீரும்பவும் கொடுக்க வேண்டும். அந்த கடமைகளை தான் முதலில் நாம் செய்வோம்.

அதன் பின்னர் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். அவ்வாறு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதன் பின்னரே வரவழைக்க முடியும் அவ்வாறு இல்லாமல் அவர்களை வரவழைக்க முடியாது.

இதனைவிட இந்தியாவில் இருந்து வரவுள்ளவர்களுக்கு கிளிநொச்சியிலோ, யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ காணி இருக்குமாயின் அவாகள் வருவதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. அவ்வாறு இல்லாமல் எதுவும் இல்லாமல் வந்து எவ்வாறு வாழப்போகின்றார்கள் என தெரிவித்தார்.

பூந்தோட்டம், சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என அவரிடம் கேட்ட போது,

வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் இணக்கப்பாட்டுடன் அரச அதிகாரிகளுடனும் கதைத்து இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என எமக்கு தெரியும். கடந்த காலத்தைப் போல் பேசி பேசி காலத்தை கழிக்காமல் இது தொடர்பான நிலைப்பாட்டை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளேன். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா வாழ் மக்கள் ஒன்றாக முடிவெடுத்து என்ன செய்லாம் என தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன் போது வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ்பாறுக் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.