செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் 2ஆவது தாக்குதலுக்கும் திட்டம் இருந்துள்ளது : பொலிஸ் பேச்சாளர்

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களின் பின்னர் இரண்டாவது தாக்குதலொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் இந்த தாக்குதல் புலனாய்வு பிரிவினரால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரட்ன இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் மூலம் சில விடயங்கள் வெளியாகியுள்ளன. முதலாவது குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் தினமொன்றில் இரண்டாவது தாக்குதலை நடத்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை நடத்த விடாது புலனாய்வு பிரிவினர் முறியடித்துள்ளனர். இந்த திட்டங்களை வகுத்த நபர்கள் மற்றும் உதவியவர்கள் தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் தாக்குதலை நடத்த வெளிநாட்டிலிருந்து சிலர் உதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.தெற்காசியா நாடொன்றில் தாக்குதலை நடத்திய பின்னர் அதன் தாக்குதல்தாரிகளை இங்கு பாதுகாப்பாக ஒழித்து வைத்திருப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்துள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)