செய்திகள்

ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கோரிக்கை

ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இந் நிலையில், ஏமனில் போர்ச் சூழலால் அங்குள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தனிப்பட்ட முறையில் அங்கிருந்து யாரும் வெளியேற முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனிடையே,  பாதிப்பு மிக்க பகுதிகளில் சிக்கியிக்கும் இந்தியர்களை கடல்வழியாக மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத் துறை செய்து வருகிறது.

ஏமனில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் உம்மன் சாண்டி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுஇ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக வெளியுறவுத் துறை உறுதியளித்திருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும்போது, “ஏமனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர 2 கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கப்பல் ஜிபவுத்தி துறைமுகம் வழியாக இந்தியா வந்தடையும். கப்பல் மூலம் மீட்க முடியாதவர்களை சாலைப் போக்குவரத்து மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது அறிக்கையில் தெரிவித்தார்” என்றார் உம்மன் சாண்டி.