செய்திகள்

ஏமாற்றிய காதலனை சரமாரியாக குத்திய பெண்

காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த பட்டதாரி பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் காதலனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ் துரைராஜ் (30). ரயில்வே ஊழியரான இவர், திருவாரூர் அருகே உள்ள குளக்கரையில் உள்ள ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்குமிடையே காதலாக மாறியது.

இந்நிலையில், சார்லஸ் துரைராஜ் பணி மாறுதலாகி தஞ்சை மாவட்டம் பூதலூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அதன் பின், சிந்துவுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். சிந்து, தனது காதலனை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முயற்சித்துள்ளார். ஆனால் சார்லஸ் துரைராஜ், சிந்துவுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால், காதலன் சார்லஸ் தன்னை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைத்துள்ளார்.

இதையடுத்து சிந்து, தனது காதலனை நேரில் சென்று சந்திப்பது என முடிவு செய்து திருவாரூரில் இருந்து புறப்பட்டு பூதலூருக்கு சென்றிருக்கிறார். ஆனால் சார்லஸ், ஆலக்குடி ரயில் நிலையத்தில் வேலை பார்ப்பதாக கூறப்பட்டதை அடுத்து அங்கு சென்றிருக்கிறார். அங்கு, காதலனை சந்தித்து நான் வாழ்ந்தால் உன்னோடு தான் வாழ்வேன். ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் சார்லஸிடம் இருந்து சிந்துவுக்கு சாதகமான பதில் வரவில்லை.

மேலும், என்னை ஏமாற்றி விடலாம் என்று பார்க்கிறாயா? என்று சிந்து கேட்டுள்ளார். அப்போது சார்லஸ், உன்னை யார் என்றே எனக்கு தெரியாது என்று சிந்துவை பார்த்து கூறி இருக்கிறார். இதில் அதிர்ச்சியுற்று ஆத்திரம் அடைந்த சிந்து, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சார்லசின் கழுத்து, தலைபகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சார்லஸ் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, சார்லசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி சார்லஸை கத்தியால் குத்திய சிந்துவை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.