செய்திகள்

ஏர் இந்தியா விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை தேர்வை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் விமானிகளின் உளவியல் நலம் தொடர்பான சந்தேகம் எழுப்பட்டு வருகிறது. விமானிகளுக்கு கண்டிப்பாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா-வின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘வெள்ளிக்கிழமையில் இருந்து துனண விமானிகளை தேர்ந்தேடுக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். அத்தேர்வில் பங்குபெறுபவர்களுக்கு உளவியல் தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக இந்திய விமானப்படையின் உதவியை நாடியிருக்கிறோம். இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடமும் உளவியல் தேர்வை கட்டாயமாக்கும்படி கடந்த ஒரு ஆண்டாகவே கேட்டுவருகிறோம். எதிர்காலத்தில் அனைத்து விமானிகளுக்கும் உளவியல் தேர்வு கட்டாயமாக்கப்படும்’’ என தெரிவித்தார்.