செய்திகள்

ஏலத்தொகையை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிடுவதில்லை: ராகுல் டிராவிட் பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சுழற்பந்து வீச்சாளர் பவான் நெகி ரூ.8½ கோடிக்கு டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டது குறித்து கேட்ட போது கூறியதாவது:-

வீரர்களை, அவர்கள் ஏலம் எடுக்கப்படும் தொகையை வைத்து நான் ஒரு போதும் மதிப்பிடுவதில்லை. ஏலம் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். ஏலம் எடுக்கப்படும் வீரரின் தொகை, அவரது திறமையை பிரதிபலிப்பது அல்ல. ஏலத்தின் போது நிறைய விஷயங்கள் நடக்கும். விலை நிர்ணயம் நமது கட்டுப்பாட்டில் கிடையாது. ஒரு வீரருக்கு மிகப்பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதற்காக, அணி உரிமையாளர் மற்றவர்களை காட்டிலும் அந்த வீரரை அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக கருதுகிறார் என்று அர்த்தம் கிடையாது.

எந்த மாதிரியான வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள், உங்களிடம் எப்படிப்பட்ட வீரர்கள் இருக்கிறார்கள்? மற்ற அணி உரிமையாளர்களுக்கு எப்படிப்பட்ட வீரர்கள் தேவைப்படுகிறார்கள் போன்றவற்றை எல்லாம் விளக்குவது மிகவும் கடினம்.

ஏலம் முடிவுக்கு வந்ததும், அணியின் மதிப்பு தெரிந்து விடும். ஆனால் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஆடும் லெவன் அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை. முன்பு நான் ஆலோசகராக பணியாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவ்வாறு செய்ததில்லை. இந்த தொடரை பொறுத்தவரை சில நேரம் குறிப்பிட்ட வீரர் சிறந்த பங்களிப்பு அளிப்பார் என்று கருத நேரிடும் போது, நல்ல வீரர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

இளம் வீரர்கள், எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவது குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவது தங்கப்பதக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவது வெள்ளிப்பதக்கம்.  இவ்வாறு டிராவிட் கூறினார்.

43 வயதான ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்திய சீனியர் அணியின் இயக்குனராக பணியாற்றிய ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முன்வந்தது. இது தொடர்பாக அவரிடமும் பேசப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிராவிட் கூறியதாவது:-

எனது வாழ்க்கையில் இந்த காலக்கட்டத்தில் நான் எடுக்கும் எந்த முடிவும் எனது தகுதி மற்றும் மனநிலையை பொறுத்தே இருக்கும். இது பற்றி முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படும். இப்போது பயிற்சியாளர் பொறுப்புக்கு நான் தயாராக இருக்கிறேனா அல்லது இல்லையா? என்பதை உறுதியாக கூற முடியாது. அது ஒரு அனுபவம். தினமும் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயம். செய்து பார்த்தால் மட்டுமே அது தெரியும். நிறைய விஷயங்களை பரிசீலித்த பிறகே நான் எந்த ஒரு முடிவுக்கும் வருவேன்.

ipl2016-auction-players-list
இதை செய்ய விரும்புகிறேன் என்று உணர்வு மட்டும் இருந்தால் போதாது. நடைமுறையிலும் காண்பிக்க வேண்டும். பயிற்சி அளிப்பது என்றால் என்ன? அதற்கு என்ன தேவை?, அதற்கு காலத்தையும், நமது ஆற்றலையும் எந்த அளவுக்கு செலவிட முடியும்? போன்றவற்றையும் பார்க்க வேண்டும். எந்த செயலில் இறங்கினாலும், 100 சதவீதம் முழு கவனமுடன் செய்ய வேண்டும்.
போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பது முக்கியமல்ல. ஆனால் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுகிறோம் என்பதே கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு முக்கிய அம்சமாகும். அதாவது கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவதற்கு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தியாகங்கள் தேவை அல்லவா? அது போல் தான் பயிற்சியாளர் பொறுப்புக்கும் பல விஷயங்கள் தேவை. இந்த வகையில் நான் மிகவும் இளையவனாகவே இருக்கிறேன். ஒரு வீரராக நான் நிறைய விஷயங்களை யோசித்ததில்லை. ஒரு கேப்டனாக வியூகங்களை வகுப்பது பற்றி கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் பயிற்சியாளர் பொறுப்பு இதை விட இன்னும் ஆழமானது. வீரராக சிந்திக்காத பல விஷயங்களையும் பயிற்சியாளராக யோசிக்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.