செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தளங்கள் மீது ஜோர்தான் விமானத்தாக்குதல்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக விமானதாக்குதல்களை ஆரம்பித்துள்ள ஜோர்தான் தனது விமானவோட்டி கொல்லப்பட்டதற்கான பதில்நடவடிக்கைகளில் இது ஆரம்பம் என குறிப்பிட்டுள்ளது.
ஜோர்தானிய வெளிவிவகார அமைச்சர் நாசர் யூடே இதனை குறிப்பிட்டுள்ளார். ஜோர்தான் தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் அந்தஅமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜோர்தான் கடந்த காலங்களில் அந்த அமைப்பின் சிரியா இலக்குகளை தாக்கியுள்ளபோதிலும் இம்முறை ஈராக்கிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிரியாவிலும்,ஈராக்கிலும் உள்ள பயிற்சி முகாம்களும் ஆயுத கிடங்குகளும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் இராணுவமும் இதனை உறுதிசெய்துள்ளது.
கொல்லப்பட்ட விமானவோட்டியின் குடும்பத்தினருடன் ஜோர்தான் மன்னர் காணப்படுவதையும், பின்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக செல்லும் விமானங்களை நோக்கி அவர் கையசைப்பதையும் அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த தளபதி இளவரசர் நினைவா என்பவர் உட்பட 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து முன்னர் ஜோர்தானில் இருவேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் விமானவோட்டியின் படுகொலையின் பின்னர் அது காணமற்போயுள்ளது.