செய்திகள்

ஐஎஸ் அமைப்பின் துணைத்தலைவர் விமான தாக்குதலில் பலி?

ஐஎஸ் அமைப்பின் துணைத்தலைவர் என வர்ணிக்கப்படும் அப்துல் ரஹ்மான் முஸ்தபா முகமட் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் விமானதாக்தலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது.
அபு அலா அல் அப்ரி என அழைக்கப்பட்ட இவர் வட ஈராக்கில் தல்அவார் பகுதியில் மசூதியொன்றிற்குள் இருந்தவேளை இலக்குவைக்கப்பட்டதாக ஈராக்கின் பாதுகாப்பு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அல்சுகாதா மசூதியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றது இதில் அந்த அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஈராக் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட நகரை 2014 ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தாக்குதல் நடைபெறும் வீடியோவையும் ஈராக்க வெளியிட்டுள்ளது.
பென்டகன் இது வரை இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்த தகவல் உண்மையானால் இது அந்த அமைப்பிற்கு விழுந்த இன்னுமொரு பாரிய அடியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனினும் ஐஎஸ் அமைப்பு இதுவரை இந்த தகவலை உறுதிசெய்யவில்லை.அந்த அமைப்பின் நடவடிக்கைகளை கடந்த சில வாரங்களாக அல் அப்ரி பொறுப்பேற்று வழிநடத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்;டு விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த வாரம் இவர் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 7 மில்லியன் டொலர்களை வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.