செய்திகள்

ஐஎஸ் அமைப்பில் இணைவதை தடுப்பதற்கு பிரிட்டனில் புதிய சட்டங்கள்

ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக சிரிய மற்றும் ஈராக் செல்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அடுத்த வாரம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்;ளதாகவும், இதில் இவ்வாறான நோக்கில் பயணம் செய்பவர்களை விமான சேவைகள் ஏற்றுவதை தடைசெய்யும் சட்டமும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஐஎஸ் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே பிரிட்டன் புதிய நடவடிக்கையை அறிவிக்கவுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் படி ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக செல்பவர்களை விமானசேவைகள் பயணிகளாக ஏற்றிச்செல்வதை பிரிட்டனின் உள்துறை அமைச்சரால் தடுக்க முடியும்.
பிரிட்டனின் உள்துறை அமைச்சு இந்த தகவலை உறுதிசெய்துள்ளது.
குறிப்பிட்ட சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக செல்பவர்களை விமானங்களில் ஏற்றுவதற்கு உள்துறை அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என இந்த சட்டங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.