செய்திகள்

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து வடக்கில் புதிய கட்சி உருவாக்கம்

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ந. தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வும் செய்தியாளர் சந்திப்பும் வவுனியாவில் நடைபெற்றது.

கட்சியின் கொள்கைகள் பற்றி இந்த கட்சி ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நிறைவேறியது. அதிகாரத்தின் சுவையை அனுபவித்து தனக்கு நிகர் தானே என்ற அகந்தையுடன் இருந்த மக்கள் விரோத மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார். இதன் மூலம் அவரது எல்லையற்ற குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் ஆண்ட காலத்தில் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பாதகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள், ஆக்கிரமிப்புகள் எதுவும் முடிவுக்கு வரவோ அல்லது அகற்றப்படவோ இல்லை.

சர்வாதிகாரப் போக்கில் இராணுவ காட்டாட்சியில் நிலங்கள், இயற்கை வளங்கள், மனித உழைப்புகள் என்பவற்றை சுரண்டி பல்தேசிய கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொள்ளை இலாபங்களைப் பெற்ற மக்கள் விரோத மகிந்த அரசின் செயற்பாடுகள் தற்போதும் புதிய அரசாங்கம் என்ற வேறு முகமூடியுடன் உலாவத்தொடங்கி விட்டன. (உதாரணம்: அண்மையில் மைத்திரி – மோடி அணுப்பரம்பல் ஒப்பந்தம்) உலக மயமாக்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனத்தை நோக்கி பயணிக்கின்றது.

மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை உண்டு, ஆரோக்கியமான நல்லதொரு போசாக்கு நிறைந்த உணவை பெற்றுக் கொள்வதற்கான உரிமை உண்டு என்ற வகையில் நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதிவிற்பனை மற்றும் நுகர்வு சம்பந்தமான விடயங்கள் நாட்டு மக்களின் மேற்குறிப்பிட்ட உரிமைகளை பாதுகாக்கும் படி இருத்தல் வேண்டும். இயன்றளவு இறக்குமதி செய்யப்பட்ட உணப்பொருட்களில் தங்கியிராமல் நாட்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலும், கல்வி வளர்ச்சியிலும், சுகாதாரத்தைப் பேணுவதிலும் அக்கறையுள்ள பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிடப்படல் வேண்டும்.

ஆனால் இன்று எமக்கு என்ன நடக்கிறது?
உணவுக்கு பதிலாக எமக்கு உட்கொள்ள கிடைப்பது நச்சு பொருட்களே ஆகும். நாம் உட்கொள்ளும் உணவே நோய்களை நோக்கி எம்மை இட்டுச் செல்கிறது. நாட்டு மக்கள் நோயாளிகளாவே மாறிவருகிறார்கள். நாளுக்கு நாள் விலையுயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் மூலம் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மக்கள் ஒரு புறம் அவ்வுணவுப் பொருட்களை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் கம்பனிகள் மறுபுறம் என மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதைவிடக் கொடுமை நாட்டு மக்கள் போசாக்கின்மை, நீரிழிவு, இருதயநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு இரசாயனங்ளைப் பயன்படுத்தி விளைவிக்கும் உணவுகளே காரணமாக அமைகின்றது.

ஒரு காலத்தில் பேரபிமானத்துடன் வாழ்ந்து வந்த விவசாயிகள் இன்று சிறுநீரக வியாதியால் பீடிக்கப்பட்டு வருகின்றனர். (நாட்டில் ஒரு நாளுக்கு சாராசரியாக 13 பேர் சிறுநீரக நோயால் மரணிக்கின்றார்கள். 200,000 க்கும் அதிகமான மக்கள் மரணப் பிடியில் சிக்கியுள்ளார்கள்.) இவ்வாறான சூழ்நிலையில் வாழ்வுரிமையைக் கேட்டு வீதிக்கு இறங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களுக்கு திருப்பிக் கிடைப்பது துப்பாக்கி வேட்டுக்களும், சிறைதண்டனைகளுமே ஆகும்.

பாதுகாப்பு வலயங்கள், உல்லாசப் பிரயாண வலயங்கள் மற்றும் பாரிய தொழிற்சாலை வலயங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் காணிகள், மீனவர்களின் கடற்கரைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றது. தனியார் மயப்படுத்தல் என்ற பெயரில் விதை உரிமை, நீர் வள உரிமை, இயற்கை வள உரிமைகள் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன, விற்பதற்கு திட்டமிடப்பட்டும் வருகின்றன. பரம்பரை பரம்பரையாக வியர்வை சிந்தி உழைத்த மலையக தோட்டத் தொழிலாளிகள் தாம் பிறந்த இந்த நாட்டில் வாழ்வுரிமைகள் அற்ற அந்நிய மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் மாறிமாறி வரும் அரசாங்கங்கள் மக்களை அடிமைத் தொழிலாளி ஆக்குவதிலும், நாட்டை விற்பனை செய்வதிலும் பல்தேசிய கம்பனிகளுக்கு தரகர்களாகவே செயற்பட்டு வருகிறார்கள்.

நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமானதாகக் காட்டிக் கொண்டு இறுதியில் உலகமயமாக்கல் என்ற பெயரில் சுரண்டலுக்கு வழிசமைப்பதற்காவே வடிவமைக்கப்படுகின்றது. காலம் காலமாக நிகழும் இக் கொடுமையில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களே ஆகும்.

கடந்த காலங்களில் நாம் வாழ்வுரிமைக்காக உதிரிகளாக பல போராட்டங்களை நடாத்தி வந்தோம். அவற்றில் சில வெற்றியடைந்தன பல தோல்வியடைந்தன. அதற்கு காரணம் எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பேரியக்கமாக இல்லாமையே ஆகும். எனவே நாம் அடையாளப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.

இன்றும் கிராமப்புற மக்களுக்கு அடிப்படைக்கல்வி உரிமை, போக்குவரத்து உரிமை, சுகாதார உரிமை, வளப் பங்கீட்டு உரிமை என முற்றாக மறுக்கப்பட்டே வருகிறது. கிராமப்புற சமூக கட்டமைப்புக்கள் சிதைவுக்குள்ளாகியுள்ளன. முதலாளித்துவ நிதி நிறுவனங்களின் கடுமையான சுரண்டல்களுக்கு ஆளாகி நிற்கதியான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு ஒரு நவீன கொத்தடிமைத்தனத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனவே இவ் அடிமை தனத்தை உடைத்தெறிந்து மக்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கு.

01. உணவு பொருளாதார தன்னாதீக்கத்தை ஏற்படுத்தல்.
02. விதைகளுக்கான ஏகபோக உரிமையை விவசாயிக்கே உரித்தாக செய்தல்.
03. மக்களின் வாழ்வாதாரத்திற்கான காட்டு வளத்தை பாதுகாத்தல்.
04. தண்ணீரை விற்பனை பண்டமாக்காமல் தடுத்து நிறுத்தல்.
05. நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தல்.

என்ற விடயங்களை முன்நிறுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்கள் பேரியக்கத்தை உருவாக்கும் நோக்கில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியை நாம் ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து நாம் செயற்பட்டது போன்று ஒன்றிணைந்து கட்சி ரீதியாக வீரியமான செயற்பாடுகளை முன்னெடுத்து தொழிலாளர், விவசாயிகளின் வாழ்வுரிமையை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம்.