ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரை குர்தீஸ் படை நெருங்குகிறது: முக்கிய நகரத்தை கைப்பற்றியது
சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ளனர். இதன் தலைநகராக சிரியாவில் உள்ள ரக்கா நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அவர்கள் பிடியில் இருக்கும் இடத்தை மீட்பதற்காக ஈராக் ராணுவம் மற்றும் குர்தீஸ் படைகள் போரிட்டு வருகின்றன. குர்தீஸ் படைகள் துருக்கி நாட்டு வழியாக சிரியாவுக்குள் நுழைந்து அங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள கோபேன் நகரை குர்தீஸ் படையினர் மீட்டனர். அதன்பிறகு அங்கிருந்து முன்னேறி கடந்த வாரம் தல் அப்யத் என்ற இடத்தை மீட்டனர். இந்த இடம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரம் ரக்காவுக்கு செல்லும் பாதையில் உள்ளது.
அங்கிருந்து முன்னேறிய குர்தீஸ் படைகள் நேற்று அயின்இஸ்ஸா என்ற நகரை கைப்பற்றி உள்ளது. இந்த இடத்தின் வழியாகத்தான் ரக்கா நகருக்கு தேவையான பொருட்கள் சென்று வந்தன. அயின்இஸ்ஸா நகரை கைப்பற்றி இருப்பதால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முக்கிய பொருட்கள் செல்வது தடைபட்டுள்ளது.
அயின்இஸ்ஸா நகரில் இருந்து ரக்கா 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இனி ரக்கா நகரை நோக்கி முன்னேற குர்தீஸ் படைகள் ஆயத்தமாகி வருகின்றன. தலைநகரம் நோக்கி குர்தீஸ் படை வருவதால் அவர்களை கடுமையாக எதிர்கொண்டு தாக்க ஐ.எஸ். தீவிரவாதிகளும் தயாராகி வருகின்றனர்.
குர்தீஸ் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் கூட்டு படைகள் தொடர்ந்து குண்டு வீசி தாக்கி வருகிறது.இதற்கிடையே சிரியாவில் உள்ள பல்மைரா நகரை சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். இந்த நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரமாகும். அங்கு ஏராளமான புராதான சின்னங்கள் இருந்தன. அவற்றை தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்து வருகின்றனர். நேற்று 2 பழங்கால இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை குண்டு வீசி அழித்துள்ளனர்.