செய்திகள்

ஐ.தே.க – சு. க இணைந்து தேசிய அரசு அமைக்க இணக்கம்: இன்று முக்கிய முடிவு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நடந்த இரகசிய சந்திப்பில் புதிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களையும் 15 பிரதி அமைச்சுக்களையும் பெறும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் 29 அமைச்சர்களைக் கொண்ட தற்போதைய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 44 அமைச்சர்கள் பதவியேற்பர். அத்துடன் 15 பிரதி அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர். மேலும் 10 இராஜாங்க அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் இது குறித்த இறுதி முடிவு இன்று காலை நடக்கும் கூட்டத்திலேயே எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்ப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டிசில்வா, ஜோன் செனவிரத்ன, அநுர பிரியதர்சன யாப்பா ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணித் தலைவர்களின் பெயர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவளை, இன்று சந்திரிகா, ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீண்டும் சந்திக்கவிருப்பதுடன் இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவிருக்கின்றனர்.