செய்திகள்

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகள் சிலவற்றில் அதிரடி மாற்றம்

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு முக்கிய பதவிகள் சிலவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்   கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் கருதி மூன்றாம் தரப்பாகவுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கட்சியின் முக்கிய பதவிகள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்

சாளரும்  அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஹரீன் பெர்னாண்டோவும் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவராக அகிலவிராஜ் காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏனைய தொழிற்சங்க தலைமைத்துவத்துக்கு அஜித் பி பெரேராவும் சுஜீவ சேரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய இளைஞர் முன்னணிக்கு கவிந்த ஜயவர்தனவும் கட்சியின் மகளிர் அமைப்புக்கு அனோமா கமகேயும் கட்சியின் மேலதிக செயலாளர்களாக ருவான் விஜய வர்தன மற்றும் ஹர்ச டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட உபதலைவராக தயா கமகேயும் அனைத்து தொழிற்சங்க செயற்பாடுகளை கண்காணிக்க ரஞ்சித் மத்தும பண்டாரவும் நியமிக்கப்பட்ட அதேவேளை, இதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சித் மத்தும பண்டார இரத்துச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக சுஜீவ சேரசிங்க மற்றும் வசந்த குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க மகிந்த கரதாஸ, நந்தபால விக்ரமசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல மாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுமென இச்செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இரத்துச் செய்யப்பட்ட மற்றும் உள்வாங்கப்பட்ட பதவிகள் நாட்டில் உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்புக்கு சமாந்திரமானதாக ஐ.தே.க.வின் புதிய சட்ட வரைபுக்குள் உள்வாங்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டதாக அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.