செய்திகள்

ஐ.தே.க. விலகினால் மைத்திரி அரசை சு.க. பாதுகாக்குமாம்!

மைத்திரிபால அரசிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி விலகுமாயின் புதிய அரசை நிலைகுலைய விடாமல் அதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாத்து – ஆதரவு வழங்கி – ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
புதிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிபீடம் ஏறிய பின்னர் மஹிந்த அரசால் மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்திப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலநூறு பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புதிய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய நல்லாட்சிக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஆனால், தற்போது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மந்தகதியே காணப்படுகின்றது. அதிலும் மத்திய வங்கி ஆளுநர் குறித்த விவகாரத்தில் அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இதனால், தற்போது குறித்த ஆளுநரான அர்ஜுன மகேந்திரன் வெளிநாடு சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார். சரியான முறையில் பார்த்தால் அவர் மீதான விசாரணைகள் முடியும்வரை அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்திருக்க வேண்டும். எனினும், அரசு இந்த விடயத்தில் பெரும் தவறைச் செய்துள்ளது. ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளியில் இருப்பவர்களுக்கு கையைக்காட்டும் இந்த ஆளும் தரப்பினர் தங்களுக்குள் இருக்கும் மோசடிக்காரர்களை ஆதரிக்கின்றனர். இதுபோன்ற அரசின் செயற்பாடுகளால் அரசுக்கும் திருடர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எமக்கு ஏற்படுகின்றது. இதேவேளை, ஏப்ரல் 23ஆம் திகதிக்குப் பின்னர் மைத்திரி அரசிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியேறுமாக இருந்தால் அவ்வரசைப் பெறுப்பேற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசிலிருந்து வெளியேறுமாக இருந்தால், நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை பெறுப்பேற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. அரசினால் மேற்கொள்ளவேண்டிய ஏனைய பணிகளை நாம் சிறப்பாக முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம்” – என்றார்