செய்திகள்

ஐ.நா. அறிக்கையை வெளியிடுவது மீண்டும் ஒத்திவைக்கப்படாது: கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கை வெளியிடுவதை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்படப்  போவதில்லை. ஏற்கனவே, குறிப்பிட்டவாறு செப்டெம்பரில் அந்த அறிக்கை நிச்சயமாக வெளியிடப்படும் என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. அரசியல்  விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்டமன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்றுக் காலை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு உறுதியளித்திருக்கின்றார்.

கொழும்பு வந்தவுடன் முதலாவது சந்திப்பாக கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் நிகழ்ந்த இந்தச் சந்திப்பில்,  போர்க் குற்றவிசாரணை, மீள்குடியேற்றம்,  காணாமல் போனோர் விவகாரம், கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தூதுக் குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஐ.நா. தரப்பில் ஜெப்ரி பெல்ட்மனுக்கு உதவியாக கொழும்பிலுள்ள ஐ.நா. செயலக அதிகாரிகள் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய அரசாங்கத்தின் மீள் நல்லிணக்க , உண்மைகளைக் கண்டறிவதற்கான பொறுப்புக் கூறல் விடயங்களில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தொடர்பில் தன்னுடைய உரையின் ஆரம்பத்திலேயே ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் குறிப்பிட்டார்.

உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளருக்கு உறுதியளித்திருப்பதாக தெரிவித்த ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி, இவ்விடயத்தில் ஐ.நா. விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கம் இவ்வாறு செயற்பட முன்வரவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்டிய ஜெப்ரி பெல்ட்மன், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளமையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார். மார்ச் மாதத்தில் இந்த அறிக்கை வெளிவரும் என்றே தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இதில் ஐ.நா.வின் முடிவு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜெப்ரி பெல்ட்மன், “நம்பகத்தன்மையுடைய, சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும்’ என இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருப்பதால்தான் இந்த அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், இந்த அறிக்கை ஒரு முறைதான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு தடவை இதனை ஒத்திவைக்கமாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் குறிப்பிட்ட அவர், செப்டெம்பர் மாதத்தில் இந்த அறிக்கை நிச்சயமாக வெளிக் கொண்டுவரப்படும் எனவும்  கூட்டமைப்பினரிடம்  உறுதியளித்தார்.

அதேவேளையில் இந்த அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையையிட்டு தமிழர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் தெரிந்துவைத்துள்ளார் என்பதையும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு  கிழக்கில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்கினார்கள்.

“வலிகாமம், சம்பூர் பகுதிகள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு  அனுமதிக்கப்படும் என அரச தரப்பில் சொல்லப்பட்டுள்ள போதிலும் அது இதுவரையில் முழுமையானதல்ல. வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமானதாகவே உள்ளது. புலனாய்வுப் பிரிவினரது செயற்பாடுகளும் தொடர்கின்றன. பொது நிகழ்வுகளில் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை மாத காலம் சென்றுள்ள போதிலும்,  மீள்குடியேற்றம் உட்பட தமிழர்களின் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசியல் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

காணி விவகாரம், காணாமல் போனவர்களின் நிலை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பனவற்றில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாக இல்லை’ எனவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினார்கள்.