செய்திகள்

ஐ.நா. அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு அதிருப்தி: ஐ.நா. பிரதிநிதியிடம் முதல்வர் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இறுதி விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு தம்மை சந்தித்த ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பெல்ட்மனிடம் தமிழ் மக்கள், வட மாகாண சபையின் சார்பில் அதிருப்தியை வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் உப செயலாளரும் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சரின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பெல்ட்மன் வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்தும், இனவழிப்புப் பிரேரணை குறித்தும் ஆர்வமாகக் கேட்டு அறிந்து கொண்டார் என முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது ஐ.நா. விசாரணை அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை குறித்து தமிழ் மக்களினதும் வடக்கு மாகாண சபையினதும் அதிருப்தியையும் முதலமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்ததாவது:

“இலங்கை அரசாங்கம் அமைந்து இரு மாதங்கள் கூட இன்னமும் பூர்த்தியாகவில்லை. இந்நிலையில் உடனடியாக தீர்வை காண வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல். எனவேதான் 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 29 ஆவது அமர்வு செப்ரெம்பர் மாதம் நடக்கும் போது கட்டாயமாக விசாரணை குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டே தீரும்.” என்றார்

புதிய அரசாங்கம் தெரிவான பின்னர் வடக்கு மாகாண சபை ‘இன அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியதற்கான காரணத்தை முதலமைச்சரிடம் பெல்ட்மன் கேட்டறிந்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் , “இந்த அரசாங்கம் அமைவதற்கு நாங்களும் உதவியிருக்கிறோம். ஆனால் ஆட்சியேற்றதும் தமிழ் மக்கள் கைவிடப்பட்டனர். இராணுவத்தை அகற்றுகிறோம், மக்களை மீளக் குடியமர்த்துகின்றோம் எனக் கூறிய இந்த அரசு எமது மக்களை ஏமாற்றி விட்டது. எமது மக்களின் மன உளைச்சலை வெளிப்படுத்தவே ‘இன அழிப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் முடிவில் இன அழிப்புப் பிரேரணை குறித்த சில ஆவணங்களை முதலமைச்சர் பெல்ட்மனிடம் கையளித்தார். இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.