செய்திகள்

ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னர் கூட்டமைப்பின் உயர் குழு ஜெனீவா செல்லும்: மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனீவா செல்லவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனதிராஜா தெரிவித்திருக்கின்றார்.  இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தக்குழு வலியுறுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் சமர்ப்பிக்கவிருக்கின்றார். இருந்தபோதிலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தைப் பயன்படுத்தி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை ஒத்திவைப்பதற்கான முயற்சி ஒன்றும் இடம்பெறுகின்றது.

இந்தநிலையிலேயே கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு ஒன்று விரைவில் ஜெனீவா செல்லும் எனவும், சர்வதேச விசாரணையை அந்தக் குழு வலியுறுத்தும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே மாவை இதனைத் தெரிவித்திருந்தார்.