செய்திகள்

ஐ.நா வழங்கிய கால அவகாசத்தை அரசு சரிவர பயன்படுத்த வேண்டும்: விஜித ஹேரத்

இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதன் ஊடாக கிடைத்துள்ள கால அவகாசத்தை புதிய அரசாங்கம் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டின் மீதான சர்வதேச தலையீட்டை தடுக்க முடியாது போகுமென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் –

கடந்த அரசாங்கம் நாட்டில் ஜனநாயக நிலைமையை சீர்குலைத்து ஒடுக்கு முறைகளை பிரயோகித்தது. இதனூடாக மனித உரிமைகள் மீறப்பட்டது. இதற்கு ரத்துபஸ்வெல, சிலாபம் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற சம்வங்கள் மற்றும் சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம். இவ்வாறான சம்பவங்கள் அடங்கியதான மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொண்டது.

இதன்படிதான் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கவென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும் நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாகவோ வேறு விடயங்கள் தொடர்பாகவோ எந்தவொரு சர்வதேச தலையீடும் தேவையில்லை.
இந்நிலையில் அண்மையில் வடமாகாண சபையில் இந்த விடயத்துடன் தொடர்புடைய தீர்மானம்மொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் தவறானது என்பதுடன் இதனை நாம் கண்டிக்கின்றோம்.

எமது நாடடில் சட்டம் வீழ்ச்சி கண்டிருந்தாலோ மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தாலோ அது தொடர்பாக பக்கச்சார்பின்றி விசாரணைகளை நடத்தி அது தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் பொறுப்பு எம்மிடம் உண்டு. இதனை விடுத்து அமெரிக்காவுக்கோ வேறு நாட்டுக்கோ இதனை கொண்டு செல்வதற்காக உரிமை கிடையாது. இதனால் எந்தவொரு சர்வதேச தலையீடும் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.