செய்திகள்

ஐ. நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் மீளவும் வலியுறுத்தல்

இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்ற கவலைகளை போக்குவதற்கு ஐ.நா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச சமூகத்துடன் இலங்கை ஒத்துழைத்து செயற்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிவதற்கும் யுத்தத்தின் ரணங்களை ஆற்றுவதற்கும் உண்மையை நிலைநாட்டுவது அவசியமான ஒரு நடவடிக்கை என்று தான் நீண்டகாலமாக நம்பி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று முன்தினம் மாலை லண்டன் றோயல் ஹோர்ஸ் கார்ட்ஸ் ஹோட்டலில் நடத்திய இராப்போசன ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு தெரிவித்திருக்கும் கமரூன்,
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை செய்வதற்கு ஐ. நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கேட்பதற்காகன தீர்மானத்தினை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டுவருவதற்கு பிரித்தானியாவின் வகிபாகம் குறித்து திருப்தி வெளியிட்டார்.

இலங்கையில் ஏறப்பட்ட ஆட்சி மாற்றம் ஸ்திதிரமானதும் செழிப்பானதுமான இலங்கை கட்டி எழுப்புவதற்கு உதவும் என்று நம்பிக்கை வெளியிட்ட கமரூன், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தல், சுதந்திர பொலிஸ், நீதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகியவற்றினூடாக ஒரு பொறுப்பு மிக்கதும் ஜனநாயகத்தன்மை மிக்கதுமான அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆரம்பகால பற்றுறுதியினை வரவேற்பதாகவும் தனது செய்தியில் கமரூன் தெரிவித்தார்.

13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் அதிகாரங்களை பகிருதல் உள்ளடங்கலாக புதிய அரசாங்கத்தின் பாரளுமன்றத்துக்கான பற்றுறுதி ஆகியவை தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுளார்.

தேர்தலில் சிறிசேன வெற்றிபெற்றதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், யுத்தத்தின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சகல மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐ. நா. விசாரணைக்கு புதிய இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக அவர் கோடிட்டுக் காட்டினார்.