செய்திகள்

ஐ.நா. விசாரணைக்கு மைத்திரிபால ஒத்துழைக்க வேண்டும்: பிரித்தானிய பிரதமர் கோரிக்கை

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனாவை பிரித்தானிய பிரதமர் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோற்கடித்த மைதிரிபால சிறிசேனா புதிய  ஜனாதிபதியாக வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானிய பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கைக்கு நான் வந்தபோது உங்களது நாட்டில் உள்ள வளத்தையும், மக்களிடம் உள்ள திறமையும் கண்டு வியந்தேன். உங்கள் நாட்டில் இருக்கும் அத்தகைய வளங்களை பயன்ப்படுத்தி நிலையான, வளமான, ஒன்றுபட்ட நாடாக இலங்கை திகழ நீங்கள் பாடுபட வேண்டும்.

ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடந்துள்ள தேர்தல் அளித்திருக்கும் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியில் அளித்திருக்கும் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

முந்தைய காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு தங்களது அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையின் மூலம் மட்டுமே இலங்கை கண்ட மீறல்கள் வெளிச்சத்துக்கு தெரியவரும். அப்போது இலங்கை மக்களுக்கு பிரகாசமான, அமைதியான எதிர்காலம் அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.