செய்திகள்

ஐ. நா. விசாரணையின் அவசியத்தை பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவரும் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் துயரங்களை உலகம்பூராகவும் ஆற்றுவதற்கு இலங்கையில் நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழில்கட்சியின் தலைவர் எட் மில்பாண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று முன்தினம் மாலை லண்டன் றோயல் ஹோர்ஸ் கார்ட்ஸ் ஹோட்டலில் நடத்திய இராப்போசன ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனுப்பிய காணொளி செய்தியில் இவ்வாறு தெரிவித்திருக்கும் மில்பான்ட் , ” முழுமையானதும் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே பிரித்தனியா மற்றும் உலகம் பூராகவுமுள்ள தமிழ் மக்களின் வடுக்களையும் துயரங்களையும் ஆற்றுவதற்கான முதலாவது படியாக இருக்க முடியும்” என்று குறிப்பிட்டுளார்.

இதே சமயம் , இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸ்கொட், நீதி அமைச்சர் கிரிஸ் கிரைளிங் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ. நா விசாரணையை வலியுறுத்தியதுடன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அழுத்தியுரைத்தனர்.